மத்துகம காமினி மாவத்தையில் வசிக்கும் வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், வர்த்தகரின் மனைவியை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கொலைச்சம்பவம் நேற்று முன்தினம் (15) இரவு 8.30 மணியளவில் நடந்தது. இரு பாதாள உலகக்குழுக்களிற்கிடையிலான மோதலே இந்த கொலைக்கு காரணமென பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மத்துகம பிரதேசத்தைச் சேர்ந்த பாதாள உலகக் கும்பல்களின் தலைவர்க ளுக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொலையாளிகள் இருவரும் அசங்க என்ற வர்த்தகரை சுட்டுக் கொல்வதற்காக வீட்டுக்குள் புகுந்தபோது அவரை சுட முடியாமல் போனதால் , கண்முடித்தனமாக அவரது மனைவியையும் சுட்டுக் கொன்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் 3 பிள்ளைகளின் தாயான 40 வயதான சந்திம தில்ஹானி என்பவரே கொல்லப்பட்ட நிலையில் , அவரது கணவர் அசங்க மத்துகம பிரதேசத்தில் உடற்பயிற்சி மையம் மற்றும் மொபைல் போன் கடை நடத்தி வரும் ஒரு பணக்கார வர்த்தகர் ஆவார்.
குறித்த நபர் நீண்டகாலம் தென்கொரியாவில் வேலை செய்தவர், தற்போது மத்துகமவில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார். அத்துடன் குறித்த வர்த்தகர் மத்துகம பிரதேசத்தில் பாதாள உலகக் குழுத் தலைவர் எனக் கூறப்படும் ‘கவாரி’ என்பவரின் நெருங்கிய கூட்டாளி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மத்துகம பகுதியை சேர்ந்த ஷான், கவாரி என்ற பாதாள உலக குண்டர்கள் ஒரே வகுப்பில் ஒன்றாக படித்த நெருங்கிய நண்பர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவர்கள் இருவரும் பின்னர் பாதாள உலகக்குழு உறுப்பினர்களாகி ஒரே பாதாள உலகக் கும்பலில் இயங்கி வந்தனர்.
எனினும், சில காலமாக அவர்களிற்குள் கருத்து வேறுபாடு நிலவி வந்த சச்சரவுகளால் கவாரி, ஷானின் பாதாள உலகக் கும்பலை விட்டு வெளியேறி தனி பாதாள உலகக் கும்பலை உருவாக்கினார்.
தொடர்ந்து சில வருடங்களுக்கு முன்னர் ஷான் நாட்டை விட்டு இரகசியமாக தப்பிச் செல்ல, கவாரி மத்துகம பாதாள உலகத்தை கைப்பற்றியிருந்தார். இரண்டு பாதாள உலகக்குழு உறுப்பினர்களிற்கிடையிலுமான மோதல் உச்சமடைய, கடந்த 9ஆம் திகதி மத்துகமவில் ஷான் என்பவருக்குச் சொந்தமான நிதி நிறுவனமொன்றை கவாரி தாக்குதல் நடத்தி அழித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த தாக்குதலால் ஆத்திரமடைந்த பாதாள உலக தலைவன் ஷான், கவரியின் நெருங்கிய கூட்டாளி என கூறப்படும் அசங்கவை படுகொலை செய்ய திட்டமிட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
அதேவேளை தனக்கு ஆபத்து நேருமென தொழிலதிபர் முன்கூட்டியே ஊகித்துள்ளதாக தெரிவித்த பொலிசார், அவர் மூன்று நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் சிசிடிவி கமராக்களையும் பொருத்தியுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
அதேசமயம் தனக்கு எதிரான அச்சுறுத்தல் காரணமாக மாலை 6 மணிக்குப் பிறகு வீட்டுக் கதவைத் திறந்து வெளியே வர வேண்டாம் என தொழிலதிபர் தனது மனைவியை எச்சரித்ததாக பொலிஸார் கூறுகின்றனர்.
எனினும் சம்பவ தினத்தன்று வீட்டின் முன்புறம் உள்ள கூண்டுகளில் இருந்த நாய்களுக்கு உணவளிக்க கதவு திறக்கப்பட்டது. அப்போது மறைந்திருந்த இரு பாதாள உலக குழுவினர் ஒரே நேரத்தில் வீட்டுக்குள் புகுந்து தொழிலதிபரை சுட முயற்சித்தபோது, வர்த்தகர், தனது 11 வயது மகனுடன் வீட்டின் மாடி அறையொன்றுக்குள் ஓடி ஒளிந்துள்ளார்.
அவரை விரட்டிச் சென்ற துப்பாக்கிதாரிகள், அறையை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதேவேளை, வீட்டின் கீழ்ப்பகுதியில் வர்த்தகரின் மனைவியும், 17 வயதான இன்னொரு பிள்ளையும் இருந்த நிலையில், கீழ்ப்பகுதிக்கு வந்த துப்பாக்கிதாரிகள் மயக்கமடைந்து விழுந்திருந்த மனைவியின் தலையில் துப்பாக்கியால் சுட்டுவிட்டு சென்றுள்ளனர்.
அந்த வீட்டில் ரி56 ரக துப்பாக்கியால் 7 ரவைகள் சுடப்பட்டுள்ள தாக தெரிவித்த பொலிஸார், கொலையாளிகள் ரி56 ரக துப்பாக்கி, மற்றும் 9 எம்எம் ரக கைத்துப்பாக்கியை கொண்டு வந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கமராக்கள் மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் சம்பவம் நடந்த போது பரிமாறப்பட்ட தொலைபேசி செய்திகள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போது வெளிநாட்டில் இருக்கும் ஷான், தனது பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் இருவரைப் பயன்படுத்தி இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பில் நான்கு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது