மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உயிரிழக்கும் கொவிட் தொற்றாளர்களின் உடலங்களை எரியூட்டல் நிலையத்திற்கு கொண்டு செல்வதற்காக மட்டக்களப்பு மாநகரசபையினால் வாகனம் ஒன்றினை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபையின் 51 வது அமர்வு, மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி. சரவணபவன் தலைமையில் நேற்று (16) நடைபெற்றது.
கொவிட் தொற்றின் தாக்கம் மற்றும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் காரணமாக இன்றைய அமர்வானது சூம் தொழில்நுட்பம் ஊடாக நடாத்தப்பட்டது.
மட்டக்களப்பு மாநகரசபை வரலாற்றில் முதன்முறையாக மாநகரசபைக்கு உறுப்பினர்கள் வருகைதராமல் சூம் தொழில்நுட்பம் ஊடாக சபை அமர்வு நடாத்தப்பட்டது இதுவே முதன்முறையாகும்.
மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் மாநகரசபையின் சபை மண்டபத்தில் இருந்து மாநகரசபை உறுப்பினர்களை சூம் தொழில்நுட்பம் ஊடாக இணைத்து இன்றைய அமர்வு நடாத்தப்பட்டது.
இதன்போது மாநகரசபை உறுப்பினர்கள் சூம் தொழில்நுட்பம் ஊடாக இணைந்து கொண்டதுடன் வழமையான சம்பிரதாயங்களுடன் மாநகரசபை அமர்வு நடைபெற்றது.
நாட்டின் கொவிட் சூழ்நிலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் கொவிட் சூழ்நிலையின் தாக்கம் காரணமாக நேற்று பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
குறிப்பாக கொவிட் தொற்றினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இறப்போரின் சடலங்கள் பொலன்நறுவை போன்ற தூர இடங்களுக்கு கொண்டு செல்லப்படுவதனால் மக்கள் பெரும் கஷ்டங்களை எதிர்கொள்வதன் காரணமாக மட்டக்களப்பில் சடலங்களை எரிப்பதற்கான எரியூட்டிகளை அமைப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் கொவிட்டினால் உயிரிழப்பவர்களை எரியூட்டல் நிலையங்களுக்கு கொண்டு செல்வதற்கான வாகனம் ஒன்றையும் வழங்குவதற்கு மாநகரசபையில் முதல்வரினால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதேபோன்று மாநகரசபையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களை விரைவுபடுத்துவதற்கும் புதிய திட்டங்களை முறையாக மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது.