மட்டக்களப்பு நகர் பையினியர் வீதியில் எரிவாய்வுக்காக இன்று அதிகாலை 4 மணி தொடக்கம் பகல் ஒருமணிவரை சுட்டெரிக்கும் வெய்யிலில் சிலிண்டர்களுடன் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் சிலிண்டர்களுடன் காத்திருந்த போதும் 300 பேர் மட்டும் எரிவாயுவை விநியோகித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதையடுத்து நீண்டநேரமாக காத்திருந்த ஏனையோர் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர். லிற்ரோ எரிவாய்வு மாவட்ட பிரதான முகவர்கள் தொடர்ந்து மாவட்டங்களில் உள்ள பல பிரதேசங்களுக்கு பிரதேச ரீதியாக தினமும் கொழும்பில் இருந்துவருகின்ற எரிவாயுக்களை கடைகளுக்கோ , எரிவாயு முகவர்களுக்கோ வழங்காது நேரடியாக மக்களுக்கு 2 ஆயிரத்து 800 ரூபாவுக்கு விநியோகித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று பைனியர் வீதியில் காலை 9 மணிக்கு எரிவாயு விநியோகிக்ப்படும் என முகவர்களால் தகவல் வழங்கபட்டிருந்தது. இந் நிலையில் ஏற்கனவே எரிவாயு பெற்றுக் கொள்ள முகவர்களால் வழங்கப்பட்ட டோக்கனுடன் ஒருபகுதியினரும், டோக்கன் பெற்றுக் கொள்ளாத ஒரு பகுதியினருமாக எரிவாயுவை பெற்றுக் கொள்ள சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வீதியின் இருபகுதிகளிலும் காத்திருந்தனர்.
இரண்டு வரிசையிலும் பெண்கள் முதியவாகள் உட்பட வெற்றுச் சிலிண்டருடன் அதிகாலை 4 மணி தொடக்கம் காத்திருந்தனர். எனினும் எரிவாயு முகவர்கள் எரிவாயு லொறியுடன் காலை 11 மணிக்கு அங்கு சென்று ஏற்கனவே டோக்கன் வழங்கப்பட்டவர்களுக்கு மாத்திரம் எரிவாயுவை விநியோகித்தனர்.
இதன் பின்னர் எரிவாயு இல்லை என பொலிசார் தெரிவித்து காத்திருந்தவர்களை அங்கிருந்து செல்லுமாறு பணித்துள்ளனர். இதனையடுத்து பொலிசார் மீது பொதுமக்கள் சீற்றம் கொண்டு பொலிசாருடன் வாய்தர்கத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் எரிவாயுவை பெறாது காத்திருந்து சுமார் 700 க்கும் அதிகமான மக்களுக்கு முகவர்கள் எதிர்வரும் வியாழக்கிழமை எரிவாயுவை வழங்குவதாக உறுதி அளித்து, அவர்களுக்கு டோக்கன் வழங்கியதையடுத்து அங்கிருந்து மக்கள் விலகிச் சென்றதாகவும் கூறப்படுகின்றது