மட்டக்களப்பு ஏறாவூரில் டெங்கு நோய்க்கு இலக்காகி 22 வயது இளைஞன் ஒருவர் இன்று (18) அதிகாலை உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு சுகாதார பிராந்திய பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.
ஏறாவூர் ஜயங்கேணி பாரதி கிராமத்தைச் சோ்ந்த 22 வயதுடைய பகிரதன் தனுஷ்கரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் டெங்கு நோய் தாக்கத்துக்கு உள்ளாகி செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கடந்த 16ம் திகதி மட்டு போதனா வைத்தியசாலை தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3 மணியளவில் உயிரிழந்ததாக அவர் தெரிவித்தார்.
தற்போது விட்டு விட்டு மழை பெய்து வரும் காரணத்தால் டெங்கு நுளம்பு பெருக்கம் ஏற்பட்டுள்ளதுடன் நேற்று (17) மட்டும் டெங்கு நோய் தாக்கத்தினால் களுவாஞ்சிக்குடியில் 2 பேரும், காத்தான்குடியில் ஒருவரும், செங்கலடியில் 2 பேரும், வாழைச்சேனையில் ஒருவரும் ,கோறளைப்பற்று மத்தியில் 4 பேரும் மட்டக்களப்பில் 4 பேர் உட்பட 14 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே பொதுமக்கள் வீட்டில் ஒரு நுளம்பைக் கண்டாலும் சுற்றுப்புறச்சூழலை துப்பரவு செய்யுங்கள். காய்ச்சல் ஏற்பட்டால் அரச வைத்தியசாலைக்கு சென்று உடனடியாகவே மருத்துவ ஆலோசனையை பெறுங்கள். காய்ச்சல் மூன்று நாட்களுக்கு தொடர்ந்தால் இரத்தப்பரிசோதனை செய்யுங்கள். காய்ச்சலுக்கு பெரசிட்டமோலை தவிர வேறு மருந்துகளை ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம் என மட்டக்களப்பு சுகாதார பிராந்திய பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.
ஆகவே ´ஒரு நுளம்பு உன்னை நாளை கொல்லும் நீ அதை இன்றே கொல்லாவிடில்´ என்பதனை மனதில் நிறுத்திக் கொண்டு பொதுமக்கள் தமது சுற்று சூழலை சுத்தமாக வைத்துக் கொள்வதுடன் டெங்கு நுளம்பு தொடர்பாக எச்சரிக்கையுடன் அவதானத்துடன் செயற்படுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.