மட்டக்களப்பில் பெண்களை ஏமாற்றி, கடத்தி கொலை செய்தமை தொடர்பில் கைதான சந்தேகநபர்களிடமிருந்து மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, சந்தேகநபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அனைத்தும், மாதாந்த தவணைக் கட்டண அடிப்படையில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
அந்த வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கான முற்பணத்தை, திருடப்பட்ட நகைகளை விற்பனை செய்து செலுத்தியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சுமார் 19 பவுண் தங்க நகைகளை சந்தேகநபர்கள் திருடி, அதனை சுமார் 50 இலட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
முதற்கட்டமாக, நகைகளை அடகு வைத்து, பின்னர் அவற்றை மீட்டு, விற்பனை செய்துள்ளதாகவும் சந்தேகநபர்கள் தகவல் வழங்கியுள்ளனர்.
அதனடிப்படையிலேயே நகையக உரிமையாளர்கள் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்
முன்னதாக கொக்கட்டிச்சோலை நெல்லிக்காடு வயல் பகுதியில் பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து உயிருடன் யுவதி ஒருவர் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, பல மர்மங்கள் வெளிக்கொணரப்பட்டன.குறித்த கிணற்றிலிருந்து உருக்குலைந்த நிலையில் பெண்ணொருவரின் உடலமும் மீட்கப்பட்டது.
இந்த சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், 05 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன், பல குற்றச் செயல்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் 03 பிரதான சந்தேகநபர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஏனைய 2 நகையக உரிமையாளர்களும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவினர்கள் தொடர்பாகவும் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதாவது சந்தேக நபர்களின் உறவினர்கள் சிலர் எந்தவித பணிகளுக்கும் செல்லாது சொத்துக்களை சேர்த்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், இவ்வாறான சொத்துக்களைக் கொள்வனவு செய்வதற்கு அவர்களுக்கு எவ்வாறு பணம் கிடைத்தது, அவர்களும் சந்தேக நபர்களுடன் தொடர்புப்பட்டுள்ளனரா என்பது குறித்தே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த குற்றச் செயல்கள் தொடர்பில், கிழக்கு மாகாண விசேட குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி ரி.மேனன் தலைமையிலான குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

