யாழிலிருந்து பேருந்து மூலம் மட்டக்களப்புக்கு கஞ்சா கடத்திச் சென்றிருந்த 4 பேர் சந்திவெளி பகுதியில் பற்றை ஒன்றுக்குள் கஞ்சா பொதி செய்துகொண்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் யாழ்.பளை பிரதேசத்தைச் சேர்ந்த 4 பேர் எனவும், அவர்களிடமிருந்து சுமார் 165 கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டதாகவும் சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் அடுத்து, சம்பவ தினமான நேற்றுமுன்தினம் மாலை குறித்த பற்றை காடு பகுதியை சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர்.
இதன்போது கேரளா கஞ்சாவை விற்பனைக்காக பொதி செய்து கொண்டிருந்த 4 பேரை 165 கிராம் கேரளா கஞ்சாவுடன் கைது செய்தனர்.
கைதானவர்கள் பளை இத்தாவில் பகுதியைச் சேர்ந்த 29,24,24,25 வயதுடையவர்கள் ஆவர்.
நால்வரும் கஞ்சாவை பொதி செய்யும்போது கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

