மட்டக்களப்பு காத்தான்குடி அமானுல்லாஹ் வீதியில், அரசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல சரக்கு விற்பனை நிலையமொன்றின் களஞ்சியசாலையை இன்று காலை நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகள் சுற்றிவளைத்தனர்.
இதன்போது களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை அரிசி மூட்டைகளை மீட்டதுடன், அரசின் கட்டுப்பாட்டு விலைக்கு பொது மக்களுக்கு விற்பனை செய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் மட்டக்களப்பு அதிகாரிகளுக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து, குறித்த களஞ்சியசாலையை முற்றுகையிட்டது.
மீட்கப்பட்ட அரிசி மூட்டைகளை மீட்டு, அவ்விடத்திலேயே குறித்த அரிசி மூட்டை அனைத்தையும் அரசின் கட்டுப்பாட்டு விலைக்கு பொது மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. அத்துடன் அரியை பதுக்கிய குறித்த பல சரக்கு விற்பனை நிலைய உரிமையாளருக்கு எதிராக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் மட்டக்களப்பு அலுவலக அதிகாரிகளினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரிசிக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் நோக்குடன் வியாபாரிகள் சிலர் அரிசியினை பதுக்கி வைத்திருப்பதாக முறைப்பாடுகள் கிடைக்கெப் பெற்றுள்ளதாகவும், வியாபாரிகள் அத்தியாவசியப் பொருட்களை பதுக்கி வைத்தல், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையை மீறி அதிக விலைக்கு விற்றல் போன்ற நடவடிக்கைகள் தொடர்பில் பொது மக்கள் முறைப்பாடு செய்யலாம் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.