மட்டக்களப்பு 6 பேர் பயணித்த தோணி வாவியில் கவிழ்ந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.
மட்டக்களப்பு சீலாமுனை பகுதியில் இருந்து நாவலடி பிரதேசத்திற்கு மட்டுவாவி ஊடாக செல்லவிருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (08) மாலை இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் இருவர் சடலமாக மீட்கப்பட்டதுடன் 4 பேர் நீந்தி உயிர்தப்பியதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மட்டு சீலாமுனையைச் சேர்ந்த 19 வயதுடைய தவசீலன் கிருசாந்தன், மாமாங்கத்தைச் சேர்ந்த 18 வயதுடைய பிரபாகரன் பிருந்தயன் ஆகிய இருவருமே சடலங்களாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டு தலைமையக பொலிஸ் பிரிவு சீலாமுனை மாமாங்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 6 பேர் டிக்டொக் வீடியோ தரவேற்றம் செய்வதற்காக சம்பவதினத்தன்று காலை 11 மணியளவில் தோணியில் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடியோ மற்றும் புகைப்படங்களை டிக்டொக்கிற்கு எடுத்துவிட்டு மீண்டும் பயணித்த போது தோணியில் கட்டப்பட்டிருந்த குள்ளாதடி இரண்டாக உடைந்ததையடுத்து தோணி வாவியில் கவிழ்ந்து அனைவரும் நீரில் மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இருவர் காணாமல் போயிருந்ததையடுத்து மீனவர்களின் உதவியுடன் அவர்களை தேடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் நாவலடிபகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்கள் சடலங்களாக மீட்கப்பட்டு மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மற்றும் காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.