மட்டக்களப்பில் வர்த்தக நிலையங்களில் எரிவாயு பெற்றுத்தருவதாக கோரி எரிவாயு கம்பனியின் சீருடையில் செல்லுவோரினால் மோசடியாக பணம் பெறும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தகவல் வெலியாகியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம் – வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர் பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றுக்கு வந்த இருவர் 30000 ரூபா பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
எரிவாயு கம்பனியின் சீருடையில் வந்த இருவர் பின்னால் எரிவாயு ஏற்றிய வாகனம் வருவதாகவும் இவ்விடத்தில் தரித்து நிற்கமுடியாத காரணத்தினால் பணத்தை தாருங்கள் வாகனத்தில் எரிவாயு இறக்கப்படும் நாங்கள் நின்றால் மக்கள் கூடிவிடுவார்கள் என்று கூறி 30000 ரூபா பணத்தைபெற்றுக்கொண்டு வேகமாக சென்றுள்ளனர்.
இருப்பினும், எந்த எரிவாயு வாகனமும் வராத நிலையில் தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதை உணர்ந்த வர்த்தக நிலைய உரிமையாளரினால் வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
மேலும், இதுபோன்ற சில சம்பவங்கள் சில நாட்களாக மட்டக்களப்பின் சில பகுதிகளில் நடைபெற்றுள்ளதாகவும் இது தொடர்பில் அவதானமாக செயற்படுமாறும் பல்வேறு தரப்பினரும் அறிவுறுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.