சிறுவர்களுக்கு கதைகூறுவதில் விசேட தன்மையினைக்கொண்டிருந்தவரும் மட்டக்களப்பின் பொக்கிஷமாகவும் கருதப்படும் மாஸ்டர் சிவலிங்கம் நேற்று காலமானார். கல்லடியை சேர்ந்த இவர் சிறுவர்களுக்கு கதைகள் கூறுவதில் பிரபல்யம்பெற்றவராவார்.
அத்துடன் இவர் கலைஞராகவும் எழுத்தாளராகவும் பல்திறமைக்கலைஞராகவும் திகழ்ந்துவந்தார். அவரது இறுதிக்கிரியைகள் இன்று நடைபெறவுள்ளது.
இதேநேரம் மாஸ்டர் சிவலிங்கம் அவர்களின் மறைவுக்கு மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது இரங்கல் செய்தியில்,
அமரத்துவமடைந்த மட்டக்களப்பு மண்ணின் பொக்கிஷம் சூகதைமாமணி_மாஸ்ட்டர்_சிவலிங்கம் ஐயாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
எமது மட்டக்களப்பு மண்ணின் பொக்கிஷமாக கலைத்துறையில் பல்வேறு சாதனைகள் , சேவைகள் புரிந்து எமது மண்ணின் புகழை உலக அளவில் கொண்டு சென்ற எமது மண்ணின் பொக்கிஷத்தினை மட்டக்களப்பு மண் இழந்து நிற்கின்றது.
குழந்தைகள் முதல் பெரியோர்வரை சிவலிங்கம் மாமா என்றால் அறியாதோர் யாரும் இல்லை.
தனது கலைத் திறமையின் மூலம் பல உள்ளங்களை கொள்ளை கொண்ட அன்பான பண்பான மனிதர் அவர்.அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.