கடந்த மே மாதம் 9 ஆம் திகதி காலிமுகத்திடல் கோட்டா கோகம போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றாம் குறித்து எதிர்வரும் 24 ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இந்த வழக்கில் பெயர்குறிப்பிடப்பட்டுள்ள மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தொடர்பிலான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த அறிக்கைகள் சட்டமா அதிபர் திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த வழக்கில் 5 சந்தேக நபர்களின் கையடக்கத் தொலைபேசி தரவுகளை சோதனைக்குட்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பான தொலைபேசி விசாரணைகளை மேற்கொள்வதற்கும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு நீதவான் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.