சமகி ஜன பலவேகவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை என பொதுமக்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இவ்வாறு கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் நபர், பனாமுர பிரதேசத்தைச் சேர்ந்த இந்திக ஜயரத்ன எனவும், அவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன், தனது மனைவி மற்றும் பிள்ளைகள் குறித்த நபரால் தாக்கப்பட்டு துன்புறுத்தப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் குறித்த நபர், தன்னை அடித்து, பலத்த காயம் ஏற்படுத்தியிருப்பதாக அவரது மகள் பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். பின்னர் அவரது மகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து சந்தேக நபரை பொலிஸார் தேடி வந்துள்ளனர். அவர் பொலிசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்துள்ளார்.
நேற்று இரவு 10.30 மணியளவில் பொலிஸார் அவரை கைது செய்தனர். அவருக்கும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எந்தவித சம்பந்தமும் இல்லை. அவர் தனது சட்டையைப் பயன்படுத்தி தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார். அதனைக் கண்ட பொலிசார் குறித்த சந்தேக நபரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். குறித்த நபருக்கும் ஆர்ப்பாட்டத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. பொலிஸார் மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.