பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட முறையற்ற அபிவிருத்தி திட்டங்கள் காரணமாக, சீன நிறுவனத்திற்கு 10.3 பில்லியன் ரூபா நிதி வழங்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக” வீடமைப்பு அபிவிருத்தி பிரதி அமைச்சர் டி.பி.சரத் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வீடமைப்பு அபிவிருத்தி பிரதி அமைச்சர் டி.பி.சரத் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் ” எதிர்க்கட்சி முன்வைக்கும் எந்த தர்க்கங்களும் நாடாளுமன்ற நடைமுறைகளுக்கும் நியதிகளுக்கும் பொருத்தமற்றவை.
அவர்கள் தர்க்கங்களை முறையாக கொண்டு வந்தால் அதற்கு அரச தரப்பு முறையான பதில் வழங்கும். நாட்டில் அபிவிருத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதா என தொடர்ந்து கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சிகள் கடந்த அரசாங்கத்தில் மேற்கொண்ட முறையற்ற அபிவிருத்தி நடவடிக்கைகளினால் 10.3 பில்லியன் ரூபாவை சீனாவிற்கு செலுத்த வேண்டியுள்ளது என்பதை மறந்து பேசுகின்றார்கள்.
ஒவ்வொரு அபிவிருத்தி திட்டங்களையும் நிறைவு செய்து பின்னர் அடுத்தடுத்த திட்டங்களை ஆரம்பித்து முறையாக நடைமுறைப்படுத்தியிருந்தால் இந்தளவு நிதி விரயமாகி இருக்காது.
கண்டிக்கான அதிவேக நெடுஞ்சாலையை கடந்த அரசாங்கம் ஆரம்பித்த நிலையில்
பில்லியன் கணக்கில் நாட்டின் பொருளாதாரத்திற்கு நட்டம் ஏற்பட்டுள்ளது.
சீன நிறுவனத்தோடு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் காரணமாக அந்த நிறுவனத்திற்கு 10.3 பில்லியன் ரூபா செலுத்த நேரிட்டுள்ளது. அதில் கால தாமதத்திற்கான கட்டணமும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வருடம் முழுவதும் நாம் மிகவும் கஷ்டப்பட்டு சேர்த்த அதிகளவு நிதியை இவ்வாறு கடந்த பொதுஜன பெரமுன அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக செலுத்த நேரிடுகிறது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.