மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான அடக்குமுறை தொடர்ந்தால், கைதுகள் நீடித்தால் வடிவேல் சுரேஸின் நடவடிக்கையும் இனி வித்தியாசமாகவே இருக்கும் என்பதை எச்சரிக்கையுடன் கூறிவைக்க விரும்புகின்றேன் என்று இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார். நுவரெலியாவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, பெருந்தோட்டக் கம்பனிகளின் அடாவடியால் பாதிக்கப்பட்டுள்ள மலையக பெருந்தோட்ட மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் தொடர்ச்சியாக அதிகரிக்கப்படுவது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் வறுமையின் பிடிக்குள் சிக்கிவிடுவார்களோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
நிலைமை இவ்வாறிருக்கையில் அரசாங்கம் தூங்கிக்கொண்டிருக்கின்றது. மக்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய தருணத்தில் நகைச்சுவை பேசிக்கொண்டிருக்கின்றது. பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தால்கூட மாணவர்களின் தேவைகளை பூர்த்திசெய்யமுடியாத நிலையில் பெற்றோர் உள்ளனர்.
அதேவேளை, பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள காணிகள் அபகரிக்கப்படுகின்றன. தொழிற்சங்கப் பிரச்சினைகள் பொலிஸ்நிலையம்வரை கொண்டுசெல்லப்படுகின்றன. எமது மக்கள் இவ்வாறு பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. எமது பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு. மலையக மக்களை புறக்கணிப்பதை கண்டிக்கின்றோம். ஏனைய மக்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் எமது மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.
அரசாங்கத்தின் நிவாரணம் மலையக மக்களுக்கு வழங்கப்படுவதில்லை. ஆயிரம் ரூபா சம்பளத்திலும் ஏமாற்று நாடகம் தொடர்கின்றது. தொழிற்சங்கம் மற்றும் அரசியலுக்கு அப்பால் மக்களுக்காக வீதியில் இறங்குவதற்கு நாம் தயார். மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கின்றது என்றார்.