புத்தளத்தில் பெண்ணொருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியொருவர் இலஞ்ச மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் வண்ணாத்தவில்லு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியான 50 வயதுடைய பொலிஸ் பரிசோதகரே இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் நிலையத்தில் போடப்பட்டுள்ள முறைப்பாடு ஒன்றை பெண்ணுக்கு சாதகமான முறையில் முடித்துக் கொடுப்பதற்காக குறித்த பெண்ணிடம் இவ்வாறு பாலியல் இலஞ்சம் கோரியதாக தெரிவிக்கப்பட்டுகிறது.
இதுபற்றி குறித்த பெண் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய, விஷேட நடவடிக்கைகளை முன்னெடுத்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள், புத்தளத்திலுள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து குறித்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரான வண்ணாத்தவில்லு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, இன்று(29) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் லஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நுவான் அசங்க விதானகே தலைமையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.