புலி அரசியலில் மூழ்கிப் போயிருக்கும் தமிழ்த் தரப்புகள் – தோல் உரியும் காலம் வெகுதொலைவில் இல்லை.!!!
தற்போது நாடு பூராகவும் சூடு பிடித்திருக்கும் உள்ளூராட்சி தேர்தல் களமானது, தமிழர் தரப்பில் பாரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய கட்சியாகப் பிரகடனப்படுத்தப்பட்ட கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவு தொடக்கம், சுயேச்சைக் கட்சிகளின் தோற்றம்வரை நீண்டு படர்ந்திருக்கும் தமிழர் அரசியல், தமிழ் மக்கள் மத்தியில் பல குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.
நிலையான கொள்கைகள் மற்றும் இனத்தின்மீதான வழிப்படுத்தல் இன்றி தனியே புலிகள் மீதான கரிசனையையும், மாவீரர்களை வசை பாடியுமே தமது அரசியலை நடத்தும் இழி நிலைக்குள் தமிழ்க் கட்சிகள் தள்ளப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும் புலிகள் என்ற சொல்லைப் பயன்படுத்தியே அரசோடு சோடி சேர்ந்திருக்கும் தமிழ்த் தரப்பினரும், தேசியம் என்ற போர்வைக்குள் ஒழிந்துகொண்டிருக்கும் தமிழ்த் தரப்பினரும் தமது இருப்பை நிலைநிறுத்தி வருகின்றனர்.
புலிகள் என்ற சொல்லைப் பயன்படுத்தாது, தம்மால் செயற்படுத்தக் கூடிய கொள்கைப் பிரகடனங்களை முன்வைத்து தேர்தலில் போட்டியிட்டால் தமக்கான அங்கிகாரம் கிடைக்காது என்ற நிலையிலேயே, ஒவ்வொருவரும் புலிப் போர்வையை போர்த்தி தமது சுயநல அரசியலை முன்னெடுத்துவருகின்றனர்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தம்மால் நடைமுறைப்படுத்தவுள்ள செயற்திட்டங்கள் எவை என்பதை, முன்மொழிய திராணியற்றவர்களையே அனைத்துக் கட்சிகளும் தேர்தலில் வேட்பாளர்களாக களமிறக்கியுள்ளனர்.
உள்ளூராட்சி மன்றத்தின் கடப்பாடுகள் என்ன அவற்றால் எவ்வாறான சேவைகளை ஆற்ற முடியும் என்ற புரிதல்கள்கூட இல்லாத வேட்பாளர்கள் வெற்றி பெற்றதன் பின்னர், என்ன செய்யப்போகிறார்கள் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் இயல்பாகவே எழத்தான் செய்கிறது.
கிராமங்களின் அபிவிருத்தி அல்லது அத்தியாவசிய மற்றும் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுக்க ஆரம்பகட்டமான நிலையே உள்ளூராட்சி. இவற்றைப் பயன்படுத்தி எவ்வாறான பொறிமுறைக்கூடாக சமூகத்தை வளர்ச்சிப் பாதையில் இட்டுச்செல்ல முடியும் என்பதை உள்ளூராட்சி மன்றங்களே தீர்மானிக்க வேண்டும்.
இவற்றை விடுத்து “கோவில் திருவிழாவில் தொலைந்து போன குழந்தையாய்” செயற்படுபபவர்களை தேர்தலில் போட்டியிட வைத்து அடையப் போகுப் பயன்கள் என்ன.
ஒவ்வொரு கட்சியும் தமது பலத்தையும் பெரும்பான்மையையும் நிலை நாட்டுவதற்காக தகுதியற்றவர்களை நியமனம் செய்து நாட்டை மேலும் குட்டிச்சுவராக்கிச் சீரழிப்பதை விட, தகுதியானவர்களின் நியமனங்களே நாட்டின் இருப்பைத் தீர்மானிக்கும்.
ஆக மொத்தத்தில் தகுதியற்றவர்களை ஆசனத்தில் அமர வைத்த தமிழர்கள் தற்போது அதற்கான தண்டனையை அனுபவிக்கத் தொடங்கியுள்ளார்கள்.
“யானை தனது தலையிலே தானே மண்ணை அள்ளிக் கொட்டுவாது போல”
அதே தவறை மீண்டும் மீண்டும் தமிழர்கள் இழைப்பர்களேயானால் கடவுளால் கூட காப்பாற்ற முடியாத நிலையே உருவாகிவிடும் என்பதே உண்மை.
இவ்வாறுதான் தமது இருப்பை நிலைநாட்ட “புலித்தோல் போர்த்திய பசுக்களின்” தோல்கள் மெல்ல மெல்ல உரியத் தொடங்கியுள்ளது. இனிவரும் காலங்களில் புலி அரசியல் செல்லுபடியற்றதாகிவிடும்.
எனவே மக்களுக்கான தமது சேவைகள் என்ன என்பதை வெளிப்படுத்தி,அவற்றை செயற்படுத்தினாலேயே அன்றி புலி அரசியல் ஒன்றும் கைகொடுக்காது என்பதை இவ் உள்ளூராட்சி தேர்தல் உணர்த்தி நிற்கும்.
நான் உங்கள்,
– ஈழத்து எழுத்தாளர் வவுனியூர் ரஜீவன்.