சென்னையில் கைது செய்யப்பட்ட 47 வயதுடைய சத்குணம் என்கிற சபேசன் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் உளவுப் பிரிவின் முன்னாள் உறுப்பினர் என தமிழக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய தேசிய புலனாய்வு பிரிவினரால் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் சபேசன் கைது செய்யப்பட்டிருந்தார்.
கோவையில் மாறுவேடத்தில் இருந்த அங்கொட லொக்காவின் மரணம் மற்றும் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் குறித்து விசாரணை நடத்திவரும் சி.பி.சி.ஐ.டி. சமீபத்தில் சபேசன் உள்ளிட்ட மூவரை கைது செய்திருந்தது.
குறித்த மூவரிடமும் இடம்பெற்ற விசாரணையில் அவர்கள் அங்கொட லொக்கா மற்றும் அவரது உதவியாளர் சானுக தனநாயக்கவுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது. 2021 நவம்பரில் பெங்களூரில் அடைக்கலம் கொடுத்த சானுக தனநாயக்க மற்றும் டி.கோபால கிருஷ்ணன் என்கிற ஜெயப்பிரகாஷ் ஆகியோரை புலனாய்வு பிரிவினர் கைது செய்திருந்தனர்.
இருவரும் விசாரணையின் போது சபேசன், சின்னசுரேஷ் மற்றும் சௌந்தரராஜன் ஆகியோருடன் இருந்த தொடர்பு குறித்து சி.பி.சி.ஐ.டி.யிடம் தெரிவித்தனர். சிபி-சிஐடி மூவரையும் கைது செய்வதற்கு முன்பு, விழிஞ்சம் ஆயுத வழக்கில் தொடர்புடையதாக சபேசன், சின்னசுரேஷ் மற்றும் சௌந்தரராஜன் ஆகியோரை இந்திய தேசிய புலனாய்வு பிரிவு கைது செய்தது.
மொத்த வலையமைப்பும் பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை கடத்தியதாகவும் இதில் இலங்கைக்கு பொருட்களை கடத்த சபேசன் முக்கிய பங்கு வகித்தார் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்தோடு ஜெயபிரகாஷ் நடத்தும் ஹவாலா பரிவர்த்தனைகள் மூலமான சட்டவிரோத பணம் லொக்கா மற்றும் சானுக தனநாயக்கவைச் சென்றடைந்தது என்றும் லொக்காவின் மரணத்திற்குப் பிறகு சானுக கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டார் என்றும் தெரியவந்துள்ளது.
பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு ஆயுதங்கள், போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த வருமானத்தை கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீளுருவாக்க முயற்சித்ததாக சபேசன் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக இந்திய தேசிய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது