பதுளை, ஹாலிஎல, ரிலா நீர்வீழ்ச்சியில் இருந்து விழுந்து இருவர் உயிரிழந்துள்ளனர்.
பிரதேசத்தில் கட்டுமான நிறுவனமொன்றில் பணி புரியும் இருவரே நேற்று (09) இரவு இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் உயிரிழந்துள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.
கிராந்துருகோட்டை பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் ஒருவரும் மற்றும் வீரகெடிய, ஹகுருவெல பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய நபர் ஒருவருமே இந்த அனர்த்தத்தில் உயிரிழந்துள்ளனர்.
நண்பர்கள் சிலர் இணைந்து நேற்றிரவு மதுபானம் அருந்தியுள்ள நிலையில், அதில் ஒருவர் புதையல் இருக்கும் இடமொன்றை காண்பிப்பதாக தெரிவித்து கற்பாறை ஒன்றின் மீது ஓடியுள்ளார்.
இதன்போல், கால் வழுக்கி கற்பாறைக்கு கீழ் பகுதியில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சியில் குறித்த நபர் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரை காப்பாற்ற சென்ற மற்றுமொரு நபரும் கற்பாறையில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
பின்னர், நண்பர்களால் குறித்த இருவரும் மீட்கப்பட்டு பதுளை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், வைத்தியசாலைக்கு கொண்டு வருவதற்கு முன்னரே இருவரும் இறந்துவிட்டதாக பதுளை பொது வைத்தியசாலையின் தலைமை மருத்துவ அதிகாரி வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்தார்.