முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு சைனாபாம் கொவிட் – 19 தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது
புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள ஆடைத்தொழிற்சாலை ஊடாக அதிகளவான கொவிட் தொற்றாளர்கள் கடந்த மாதம் 17ஆம் திகதி இனம் காணப்பட்டுள்ள நிலையில், ஆடைத்தொழிற்சாலை ஒருமாத காலமாக மூடப்பட்டு மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது.
புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையில் சுமார் 1200 க்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் பணியாற்றி வருகின்றார்கள்.இவ்வாறான சந்தர்ப்பத்தில் இவர்களுக்கான கொவிட் – 19 தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்ட படைத்தலைமையகத்தின் ஏற்பாட்டில் இந்த தடுப்பூசிகள் மாவட்ட இராணுவ மருத்துவமனை மருத்துவர்கள் ஊடாக ஆடைத்தொழிற்சாலையில் வைத்து தடுப்பூசி ஏற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இயங்கி வருகின்ற ஆடை தொழிற்சாலையில் பாரிய கொரோனா கொத்தணி உருவாகி முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளையும் முடக்க நிலைக்கு கொண்டு செல்வதற்கு பிரதான காரணமாக அமைந்திருந்தது அந்தவகையில் மீண்டும் ஆடை தொழிற்சாலையை திறக்க வேண்டாம் என பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ஆடைத்தொழிற்சாலை திறந்து தன்னுடைய பணிகளை ஆற்றி வருகின்றது அந்த வகையிலே ஆடைத் தொழிற்சாலையில் இறுக்கமான சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும் ஊழியர்களுக்கு தடுப்பூசிகளை ஏற்றுமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கைகளை முன்வைத்து வந்திருந்தனர் இந்நிலையில் இன்றைய தினம் ஊழியர்களுக்கு தடுப்பூசி ஏற்றுகின்ற நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது
இந்த தடுப்பூசிகளை வழங்குவதற்கு உதவிய நாட்டின் ஜனாதிபதி அமைச்சர் நாமல் ராஜபக்ஸ மற்றும் முல்லைத்தீவு மாவட்ட சுகாதார சேவைகள் பிரிவினர் மற்றும் ஆடை தொழிற்சாலை நிர்வாகத்தினர் உள்ளிட்டவர்களுக்கு ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் தங்களது நன்றிகளை தெரிவித்து உள்ளார்கள்
குறிப்பாக தங்களது ஆடை தொழிற்சாலையில் கொரோனா தொற்றிய பின்னர் அச்சத்தோடு பணியாற்றி வந்த போதும் தற்போது தடுப்பூசி ஏற்றப்படுவது தமக்கு ஒரு ஆறுதலாக இருப்பதாகவும் இந்த செயற்பாட்டினால் தங்களுடைய குடும்பங்கள் மற்றும் சமூகமும் அச்சமற்ற ஒரு நிலைமையில் வாழ வழிவகுக்கும் எனவும் ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்