கலேவெல பிரதேசத்தில் தோழியிடம் பிறந்து 5 நாட்களே ஆன சிசுவை ஒப்படைத்துவிட்டு இளம் பெண் ஒருவர் தலைமறைவான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
ஹோட்டல் ஒன்றில் வைத்து தனது தோழியை ஏமாற்றி இளம் பெண் ஒருவர் இச் செயலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை கலேவெல காவல்துறையின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் தெரிவித்துள்ளது.
தான் அவசர பயணம் செல்வதாகவும் தனது குழந்தையை நன்றாக பார்த்துக் கொள்ளுமாறு தெரிவித்து தனது தோழி சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு மாலை வரை திரும்பி வரவில்லை எனவும் கைக்குழந்தையுடன் கலேவெல பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்த 23 வயது யுவதி தெரிவித்துள்ளார்.
புத்தளம் ஆதார வைத்தியசாலையில் தனது தோழி குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்ததாகவும் அவர் பெற்ற குழந்தையுடன் கலேவெல ஹோட்டலில் கடந்த 4ம் திகதி ஒரு அறையை வாடகைக்கு எடுத்து தங்கியதாகவும் குறித்த தோழி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
அத்தோடு அவர் வெலிமடை, மொரகொல்ல பிரதேசத்தை சேர்ந்த 27 வயதான பெண் எனவும் தெரிவித்துள்ளார்.
பொலிஸாரிடம் பொறுப்பேற்கப்பட்ட 5 நாட்களே ஆன சிசு தம்புள்ளை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
கைக்குழந்தையுடன் காவல் நிலையம் வந்த இருபத்திமூன்று வயதுடைய யுவதியும் கலேவெல பிரதேசத்தில் வசிப்பவர்.
சந்தேகத்திற்குரிய பெண்ணை கைது செய்ய கலேவெல காவல் பிரிவின் சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகள் குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.