பேக்கரி பொருட்கள் உற்பத்தி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த பெண்ணொருவர் , கணவரால் கூரிய ஆயுதத்தால் தாக்கிப் கொலை செய்யப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் புதன்கிழமை (14) அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் ஹட்டன் வட்டவளை பிரதேசத்தில் வசித்து வந்த சத்தியவேலு நதிகா என்ற 32 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
திருமணத்தின் பின்னர் கணவருடன் ஹட்டன் வட்டவளை பகுதியில் வசித்து வந்த பெண், கணவருடன் வாழ முடியாது என்று கூறி, இரண்டு வருடங்களுக்கு முன் வென்னப்புவ- வைக்கால் பிரதேசத்தில் உள்ள பேக்கரி பொருட்கள் தயாரிப்பு நிலையத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளார்.
கணவன் பலமுறை தொலைபேசியில் அழைத்து வீட்டுக்கு வருமாறு கூறியும் தன்னுடன் வாழ முடியாது எனக் கூறி மறுத்துள்ளார். இதன் காரணமாக அவருக்கு பல தடவைகள் கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துக்கு முந்தைய நாள் இரவிலிருந்தே பெண்ணின் கணவர் குறித்த பேக்கரி அருகே தங்கியிருந்துள்ளார்.
இதன்போது அதிகாலை, 2:00 மணியளவில், பேக்கரிக்கு தேவையான வேலைகளைச் செய்வதற்காக அவரது மனைவி சென்றபோது மறைந்திருந்த கணவர், அவரை மார்புப் பகுதி மற்றும் தலைப் பகுதியில் பலமுறை கத்தியால் குத்தியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.