விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் குடும்பத்தை வைத்து அரசியல் செய்வதை உடனடியாக நிறுத்துமாறு முன்னாள் இராணுவத் தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறியுள்ளார். ‘
புலம்பெயர் தமிழர்களிடம் இதனை தாம் கேட்டுகொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் சரத் பொன்சேகா மேலும் கூறுகையில்,
இறுதிப் போரில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனும், அவரின் மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளும் உயிரிழந்துவிட்டனர். இது அனைவரும் அறிந்த உண்மை.
இந்நிலையில், பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என்று ஒரு குழுவினரும், பிரபாகரனின் மனைவி மற்றும் மகள் உயிருடன் இருக்கின்றனர் என்று இன்னொரு குழுவினரும் தமது சுயலாப அரசியலுக்காகப் பிரசாரம் செய்து வருகின்றனர்.
புலம்பெயர் தமிழர்களே இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் நாம் விநயமாகக் கேட்டுக்கொள்வது என்னவெனில், உங்கள் சுயலாப அரசியலுக்காக உயிரிழந்த பிரபாகரனின் குடும்பத்தை வைத்து அரசியல் செய்வதை உடனடியாக நிறுத்துங்கள் எனவும் அவர் கூறினார்.
அதேவேளை பிரபாகரனின் மனைவி மதிவதனி மற்றும் மகள் துவாரகா ஆகியோர் உயிருடன் இருக்கின்றனர் எனவும், அவர்களைத் தான் நேரில் சந்தித்தார் எனவும் வெளிநாடொன்றில் வசிக்கும் மதிவதனியின் சகோதரி ஒருவர் சமூகவலைத்தளங்களில் காணொளியொன்றை அண்மையில் வெளியிட்டிருந்தார்.
அந்த வீடியோ வைரலான நிலையிலேயே பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மேற்கண்டவாறு கூறியுள்ள்ளமை குறிப்பிடத்தக்கது