தொழிலாளர்களின் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் முன்வைக்கப்படவுள்ள சட்டமூலம் அடுத்த மாதத்தில் தொழிலாளர் ஆலோசனை சபைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதனை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். அதன்படி குறித்த சட்டங்கள் தொடர்பில் பொது மக்களின் கருத்துக்களை கேட்டறியும் ஏழாவது நிகழ்வு நேற்றைய தினம் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.
அத்துடன் இதுவரை பொது மக்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள கருத்துக்கள் தொடர்பிலான சாராம்சங்களும் இதன்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்மைய, புதிதாக ஒருவரை சேவையில் இணைத்துக்கொள்ளும் போது மற்றும் பணிபுரியும் இடத்தில் காணப்படும் பாகுபாடுகளை தீரத்துக்கொள்வதற்கு சட்டத்தில் புதிய பரிந்துரைகளை அறிமுகப்படுத்தவும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், வேதன நிர்ணயச் சபைச் சட்டம் மற்றும் கடைகள் காரியாலயச் சட்டத்தில் சுட்டிக்காட்டப்படுகின்ற சேவை நிலைமை மற்றும் நிபந்தனைகள் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ள சரத்துக்களில் காணப்படும் முரண்பாடுகளை தீர்த்து சமமான சட்ட அந்தஸ்த்தை உருவாக்குவதற்கு எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும் தொழிலாளர் விரும்பும் வேலைநாட்கள் மற்றும் நேரத்தை மாற்றிக்கொடுப்பதற்கும் புதிய தொழிலாளர் சட்டத்திருத்தத்தில் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேலதிக பணிநேரம் மற்றும் அதற்கான கொடுப்பனவு தொடர்பில் ஒருமித்த தீர்மானத்தை கடைப்பிடிப்பதற்கு சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், வெளிநாட்டவர்கள் இலங்கையில் பணிபுரியும் போதும் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதோடு, பயிற்சிபெறுவோர், பயிலுநர்களாக பணிபுரிவோர் மற்றும் கற்றல் நடவடிக்கைகளுடன் பணிபுரிவோர் தொடர்பிலும் சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றது.
அதன்படி மனைவிக்கு பிரசவத்தின் போது கணவருக்கு விடுமுறை வழங்குவது தொடர்பிலும் புதிய சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படவுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.