சீனாவின் சோங்கிங் என்ற இடத்தில் இருக்கும் பாலம் அதன் தனித்துவமான அமைப்புக்காக புகழ்பெற்றது. இங்கு ஒரு முழு கிராமமும் ஒரு பாலத்தின் மேல்தான் கட்டப்பட்டிருக்கின்றன.
லிசியாங் நதியின் மேல் இருக்கும் இந்த கிராமம் நவீன கட்டிடக்கலையின் வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. இதில் சீன மற்றும் மேற்கத்திய கட்டடக்கலையில் அமைந்த கட்டடங்கள் இருக்கின்றன.
ஏன் ஒரு பாலத்தின் மீது கிராமத்தை அமைக்க வேண்டும் என்ற கேள்வி இருக்கலாம். சீன அரசானது முழுக்க முழுக்க சுற்றுலாப் பயணிகளைக் கவரும் நோக்கத்திலேயே இந்த அமைப்பை உருவாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
பொருளாதார லாபத்தை மனதில் வைத்துக் கட்டப்பட்டதால் மிகவும் தனித்துவமான அமைப்பை உருவாக்க மிகவும் மெனக்கெட்டுள்ளனர். இதற்காக இங்கு மேற்கத்திய வடிவில் தங்குமிடங்களும் சீன பாரம்பரிய வடிவில் சில இடங்களும் கட்டப்பட்டுள்ளன.
சுற்றுலாப்பயணிகளை கவருவதற்காக ரியோவில் இருப்பது போன்ற இயேசுவின் சிலை முதலான பல மினியேச்சர்களை இங்கு எழுப்பியுள்ளனர். இங்குள்ள கட்டிடங்களுக்கு கண்ணைப் பறிக்கும் நிறங்களில் பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாலத்தில் கட்டப்பட்ட கிராமம் எதிர்பார்த்த அளவு சுற்றுலாப்பயணிகளைக் கவரவில்லை. இப்போது பலர் இங்கிருந்து இடம் பெயர்ந்து வெளி ஊர்களுக்கு சென்றுவிட்டனர். வீடுகள் காலியாகவே கிடக்கின்றன.
அக்கம்பக்கத்து ஊர் மக்கள் மட்டும் அவ்வப்போது வந்து செல்லும் இந்த பாலத்தை சுற்றுலாப்பயணிகளும் அவ்வப்போது எட்டி பார்க்கின்றனர்.