4,586 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருட்களை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடிக் கப்பல் ஒன்று தென் கடற்பரப்பில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சந்தேகநபர்கள் கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு தெற்கே தேவந்தரா முனையில் இருந்து சுமார் 229 கடல் மைல் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில் வைத்து கடற்படையினரால் இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படை, அரச புலனாய்வுப் பிரிவு மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் என்பன இணைந்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போதே குறித்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த மீன்பிடிக் கப்பலில் இருந்து 128 கிலோ 327 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 106 கிலோ 474 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மீன்பிடிக் கப்பலுடன் எட்டு சந்தேக நபர்களும், கப்பலுக்கு எரிபொருள் விநியோகிக்க வந்ததாக சந்தேகிக்கப்படும் மற்றுமொரு பல நாள் கப்பலில் இருந்த ஆறு சந்தேக நபர்களும் கடந்த 16 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.