மன்னார் மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களை கடத்துவதற்கு முயற்சிப்பதாக கிடைக்கப்பெற்றுள்ள தகவலையடுத்து மன்னாரில் பாதுகாப்பினை பலப்படுத்த காவல் துறை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னதாக சிற்றூந்தில் வருகை தந்த இருவர் உணவுகளை கொடுத்து மாணவர்களை கடத்துவதற்கு முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த சந்தர்ப்பத்தில் சிற்றூந்தில் வருகை தந்தவர்களிடமிருந்து மாணவர்கள் தங்களை விடுவித்துக் கொள்வதற்காக கூச்சலிட்ட நிலையில் வீட்டிற்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது என காவல் துறையினர் தெரிவித்தனர்.
அதன்படி குறித்த மாணவர்களின் பெற்றோர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தமையை தொடர்ந்து அனைத்து பாடசாலைகளிலும் பாடசாலைகளை அண்மித்த பகுதிகளிலும் இராணுவத்தினர் மற்றும் காவல் துறையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் மாணவர்கள் தனித்து பயணிப்பதனை தவிர்த்துக்கொள்ளுமாறும், ஏனைய மாணவர்களுடன் இணைந்து பயணிக்குமாறும் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
ஆரம்ப பிரிவு மாணவர்களை பெற்றோர் அழைத்து வரவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பில் மன்னார் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.