யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் பெண் பார்வையாளர்களுடன் அநாகரிகமான முறையில் நடந்துள்ளதுடன், ஒருவரை தாக்கவும் முயன்றுள்ளார்.
இந்தசம்பவம் நேற்றையதினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தெரியவருகையில்,
பெண் ஒருவர் தனது தாயாரினை கண் சத்திர சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்திருந்தார். அவர் வீட்டுக்கு வந்து உணவு எடுத்துக் கொண்டு சென்று தாயாருக்கு வழங்கியுள்ளார்.
இதன்போது அங்கு வந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் அந்த பெண்ணுடன் அநாகரிகமான முறையில் நடந்து நாகரீகமற்ற வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டார்.
இதன்போது குறித்த பெண், தான் தாயாரை விடுதியில் நின்று கவனித்து வருவதாகவும் சாப்பாடு கொடுக்க வந்ததாகவும் தெரிவித்தார்.
அந்த பெண் கூறியதை செவிமடுக்காத குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தர் அவரை வெளியே விரட்டியடித்தார்.
இவ்வாறு செய்துவிட்டு அருகில் இருந்த விடுதிக்கு சென்று வேறொரு ஆணொருவருடன் முரண்பட்டு அவரை தாக்குவதற்கு முயற்சித்துள்ளார். இதன்போது அவ்விடத்திற்கு வந்த வைத்தியர் அவரை தடுத்துள்ளார்.
குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தர் இதற்கு முன்னரும் பல தடவைகள் நோயாளிகளுடனும் பார்வையாளர்களுடனும் அநாகரீகமான முறையில் நடந்ததால் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டவர் என்றும், இவர் தொடர்ந்தும் இவ்வாறே செயற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
அத்துடன் இவர் வைத்தியர் ஒருவரது உறவினர் என்பதால் இவருடன் ஏனையோர் பேசுவதற்கு பயப்படுவதாக கூறப்படுகிறது. அண்மைக்காலமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் அட்டகாசம் தலைவிரித்து ஆடுகின்றது.
இதற்கு முன்னரும் பார்வையாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவங்களும் பாதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் அநாகரிகமான செயற்பாடுகளால் மக்களும் நோயாளிகளும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு செல்வதற்கு தயங்குகின்றனர்.