695 பில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்பு பிரேரணையை நாடாளுமன்றில் முன்வைக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
நிலவுகின்ற நெருக்கடியான பொருளாதார சூழல் காரணமாக பொதுமக்கள் முகங்கொடுக்க நேரிட்டுள்ள அழுத்தங்களை இயலுமான வரையில் குறைப்பதற்காக சமுர்த்திப் பயனாளிகள், பெருந்தோட்ட மக்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு இந்த ஆண்டின் ஆரம்பத்தில் அரசாங்கத்தால் சலுகை திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டது.
அதற்கான செலவுகளை மேற்கொள்வதற்கும், அத்தியாவசிய அரச சேவைகளைத் தடைகளின்றி தொடர்ச்சியாக மேற்கொண்டு செல்வதற்கு தேவையான நிதியைப் பெற்றுக்கொள்வதற்காகவும் குறைநிரப்பு பிரேரணை ஒன்றை சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய, தேசிய பாதீட்டுத் திட்டத் திணைக்களத்தின் ‘பாதீட்டுத்திட்ட சலுகைச் சேவைகள் மற்றும் திடீர் தேவைகளின் பொறுப்பு’ என்ற கருத்திட்டத்தின் கீழ், 695 பில்லியன் ரூபா நிதியை ஒதுக்குவதற்காக நாடாளுமன்றத்தில் குறைநிரப்பு பிரேரணை சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற அடிப்படையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
மேலும் அரச வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில், உள்நாட்டு வருமான வரி சட்டம், பெறுமதி வரி சட்டம், தொலைத் தொடர்பு தீர்வை சட்டம், பந்தயங்கள் மற்றும் சூதாட்ட தீர்வை சட்டம், நிதி முகாமைத்துவ சட்டம் ஆகியவற்றில் திருத்தங்களை மேற்கொள்ள பிரதமர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது