„பழைய நாடகம் புதிய மேடையில் „
இலங்கைத்தீவின் பூர்வகுடிகளான நாகர்களும் இயக்கர்களும் தீவு முழுவதும் வாழ்ந்து வந்தார்கள். அவர்களின் வழித்தோன்றல்களே தமிழர்கள் என்பது ஆதாரத்துடனும் தொல்லியல் சான்றுகளுடனும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது யாவரும் அறிந்த ஒன்றே. சிங்களவரின் முன்னோரான விஜயன் இலங்கைக்கு வருவதற்கு முன்னரே இலங்கை முழுவதும் வாழ்ந்தவர்கள், சிங்களவரின் பெருக்கத்தினாலும் பயிர்செய்கைகாகவும் அவர்கள் வடக்கு கிழக்கை தாயகமாக கொண்டு வாழத்தொடங்கினர். பின்னர் ஏற்பட்ட அந்நியர்களின் படையெடுப்பின் போதும் அஞ்சாது போரிட்டு வீரத்தை நிலைநாட்டி வாழ்ந்து வந்தார்கள். ஏனைய சிங்கள அரசுகள் ஆங்கில அரசுக்கு வரி செலுத்திய போதும் தமிழ் அரசுகள் வரி செலுத்த மறுத்து வந்தன. இதனை எதிர்த்து ஆங்கில அரசு போரிட்ட போதும் அதனை முறியடித்து சிறப்புடன் ஆண்டு வந்தனர். ஆனாலும் காட்டிக்கொடுப்பினாலும் துரோகத்தினாலும் அழிக்கப்பட்டது.
ஆங்கில அரசானது இலங்கைத்தீவின் செல்வங்களையெல்லாம் சூறையாடிச் சென்றபோது ஆட்சிப் பொறுப்பை சிங்களவர்களிடம் ஒப்படைத்துவிட்டு சென்றது. ஆங்கிலேயரின் ஆட்சிக்ககாலத்தில் உயர் அரச அதிகாரிகளாக தமிழர்களே பெரும்பான்மையாக இருந்தனர். தமிழர்கள் கல்வியில் சிறந்தவர்களாகவும் உயர் பொறுப்புகளில் இருப்பதைப் பொறுத்துக் கொள்ளாத சிங்கள அரசு விகிதாசார பிரதிநிதித்துவத்தை கொண்டு வந்து அவர்களின் பதவிகளை கொஞ்சம் கொஞ்சமாக பறித்து இறுதியில் கல்வி உரிமையிலிருந்து அடிப்படை உரிமை வரையும் போராடித்தான் பெறவேண்டும் என்ற நிலைக்குத் தள்ளியது . இதன் ஒர் அங்கமே யாழ் நூல்நிலைய எரிப்பும். இந்நிலையில் சாத்வீகப் போராட்டங்கள் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டது. அத்தனையும் சிங்கள ஏகாதிபத்தியத்தினால் அடித்து நொருக்கப்பட்டது. இறுதியில் வேறு வழியின்றி ஆயுதப் போராட்டமாக உருவெடுத்து,அர்ப்பணிப்புடன் போராடி அனைத்து அரச நிர்வாகங்களையும் கொண்ட வல்லரசுகளையும் எதிர்த்துப் போராடும் வல்லமை கொண்ட அரச நிலையை எட்டியது. இந்நிலை எட்டுவதற்கு கொடுக்கப்பட்ட விலையோ ஆயிரம் ஆயிரம் உயிர் கொடைகளும் உடைமை அழிவுகளும். ஆனாலும் காட்டிக்கொடுப்பினாலும் துரோகத்தினாலும் மழுங்கடிக்கப்பட்ட பின் பல நாடுகளின் உதவியுடன் முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்த வரலாற்றை யாவரும் அறிவோம்.
இன்று அனைத்துலக தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை புலம்பெயர் தமிழ் மாணவர்களுக்காக ஈழத்தமிழர் வரலாற்றை மேம்படுத்தப்பட்ட பாடநூலினூடாக குழப்பியும் தவிர்த்தும் எழுதப்பட்டுள்ளது. வரலாற்றை எப்படி மேம்படுத்த முடியும்? வரலாறு என்பது நடந்ததை சொல்வதுதானே வரலாறு! எமக்கு மறுக்கப்பட்ட உரிமைகளையும், பின்னர் நம்மீது காலங்காலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த படுகொலைகளையும் இறுதியாக முள்ளிவாய்க்காலில் நடந்தது இன அழிப்பு என்பது உலகறிந்த உண்மை. அதற்கு கண்கண்ட சாட்சிகள் ஆயிரமாயிரம் இருக்கும்போது அதை தவிர்ப்பது ஏன்? இவற்றை நமது அடுத்த சந்ததியினருக்கு கொண்டு செல்வது நமது கடமை அல்லவா! புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் வரலாற்றை அடுத்த சந்ததியினருக்கு எடுத்துச் சொல்வதில் ஆர்வமாய் இருக்கும்போது உண்மையான வரலாற்றை கொடுப்பது தமிழ் கல்வி அமைபபுக்களின் கடைமயே. தாயகததில் உண்மையான வரலாறு மறைக்கப்பட்டு வரும்போது புலம்பெயர் நாடுகளிலாவது பேணிப் பாதுகாப்பது காலத்தின் தேவையல்லவா!
ஆனால் புலம்பெயர் நாடுகளில்
இதற்கு கூறப்படும் காரணங்களாக அந்தந்த நாடுகளில் இருக்கும் சட்டதிட்டங்களுக்கு அமைவாக வரலாறு எழுதப்பட்டுள்ளது என்கிறார்கள். ஓர் இனத்தின் அல்லது நாட்டின் வரலாறு இன்னொரு நாட்டின் சட்டதிட்டங்களுக்கு எழுதப்பட வேண்டும் என்ற விதி எங்கு உள்ளது. மேலும் நமது உரிமைக்காக போராடிய காவிய நாயகர்களை கூட வரலாற்றில் தவிர்த்திருப்பது ஏன்?
முள்ளிவாய்க்காலில் நடந்தேறியது உலக வரலாற்றிலேயே மோசமான இனப்படுகொலை. இதனை நம்மினமே வரலாற்றிலிருந்து மறைத்திருப்பது அங்கு நடந்ததை காட்டிலும் மோசமான படுகொலையே!
இதற்கு நியாயம் கேட்பவர்கள் குழப்பவாதியாக்கப் படுகிறார்கள்.
உலகின் மூத்த மொழிக்கு சொந்தக்காரனான இலங்கைத்தீவில் தொல் குடியான தமிழரின் வரலாறு இன்று ஒரு சிலரின்
கையில் அகப்பட்டு கேட்பாரின்றி தத்தளித்து நிற்கிறது.
தமிழர் வரலாற்றில் துரோகங்கள் காட்டிக்கொடுப்புகள் பல்வேறு காலங்களில் இடம்பெற்று வந்திருக்கின்றன. இன்று வரலாறே துரோகம் போயுள்ளது. இன்று புலம்பெயர் நாடுகளில் வரலாற்றை ஏலம் விடுவார்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இதற்கெல்லாம் காரணம் எமக்கென்று ஒரு தலைமை இன்மையே.
அன்பான பெற்றோர்களே உங்களுக்கு தெரிந்த வரலாற்றை ் உங்கள் பிள்ளைகளுக்கு நீங்களே சொல்லிக் கொடுங்கள். இப்படியான துரோக வரலாறுகளைத் தவிர்த்து ஓரளவுக்காவது எம்மினத்தை அழிவிலிருந்து காப்பாற்ற முடியும். கடந்த வரலாற்றை கற்றால்தான் ஒர் இனம் அதிலிருந்து பாடங்கற்று
எதிர்காலத்தில் எழுச்சியுற முடியும்.
பண்டாரவன்னியன் காலத்தில் ஒரு காக்கை வன்னியன் தேசியத்தலைவர் காலத்தில் ஒரு கருணா
அந்த வரிசையில் இதுவும் ஒர் அத்தியாயமா?
காலந்தான் மாறியுள்ளது. காட்சி மாறவில்லை.
பழைய நாடகம் புதிய மேடையிலா?
.எல்லாளன்.
(பகிரலை ஊடாக கிடைக்கப்பெற்றது)