நுவரெலியா, டொப்பாஸ் பகுதியில் பழங்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் பழங்களை திருடிய நபரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நுவரெலியா நீதவான் நீதிமன்ற நீதிபதி பிரபுதிகா லங்கான்தினி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
குறித்த சந்தேக நபர் பழக்கடையில் இருந்து 46,000 ரூபாய் பெறுமதி மிக்க பழங்களை திருடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருட்டு சம்பவம் தொடர்பில் பழக்கடை உரிமையாளர் நுவரெலியா குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு செய்திருந்த முறைப்பாட்டு பதிவு செய்திருந்தார்.
இதனையடுத்து, நுவரெலியா பொலிஸ் தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரேமலால் ஹட்டியாராச்சியின் பணிப்பின் பேரில், குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொறுப்பதிகாரி இந்துநில் பிரேமலால் விசாரணைகளை முன்னெடுத்திருந்தார்.
இதன்போது விசாரணைக்காக நியமிக்கப்பட்டிருந்த மூவரடங்கிய குழுவினர் நடவடிக்கையில் ஈடுப்பட்டு சிசிரிவி கமராவில் பதிவாகியிருந்த காணொளி உதவியுடன் சந்தேக நபரை கடந்த ஞாயிற்றுக்கிழமை (18-02-2024) மாலை கைது செய்தனர்.
இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் லபுக்கலை குடா ஓயா பகுதியை சேர்ந்த (44) வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இவரை பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்திய பொலிஸார் சந்தேக நபரிடம் வாக்கு மூலம் பெற்றதன் பின் நுவரெலியா நீதவான் நீதிமன்ற நீதிபதி பிரபுதிகா லங்கான்தினி முன்னிலையில் கடந்த திங்கட்கிழமை (19) மாலை ஆஜர்படுத்தியபோது சந்தேக நபரை இம்மாதம் 26ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.