பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவியின் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான கணினியை திருடியதாக குற்றஞ் சாட்டப்பட்டு கைதான பல்கலைக்கழக மாணவி ஒருவரை இரண்டு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்ய மஹர நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டவர் குருணாகல் பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய பல்கலைக்கழக மாணவியாவார்.
குற்றம்சாட்டப்பட்டவரும் கணினியின் உரிமையாளரும் களனிப் பல்கலைக்கழக விடுதியின் அறையொன்றில் ஒன்றாக தங்கியிருந்ததாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.
சந்தேக நபர் ,பல்கலைக்கழக விடுதியின் அறையில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தின் போது அறையில் இருந்த கணினியை திருடி குருணாகல் பிரதேசத்தில் விற்பனை செய்துள்ளதாகவும் இவ்வாறு விற்பனை செய்யப்பட்ட கணினி கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் நீதிமன்றில் மேலும் தெரிவித்தனர்.
இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பான விசாரணைகளை எதிர்வரும் ஜூலை மாதம் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க மஹர நீதிமன்ற நீதவான் காஞ்சனா த சில்வா மேலும் உத்தரவிட்டுள்ளார்.