இலங்கை அரசியலமைப்பு மற்றும் 1981ஆம் ஆண்டு 02ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் சட்டத்தின் 04வது சரத்துக்கு அமைய நாடாளுமன்றம் இன்று (16-07-2022) முற்பகல் 10.00 மணிக்குக் கூடவிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவித்துள்ளார்.
1981ஆம் ஆண்டு 02ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 04வது சரத்துக்கு அமைய ஜனாதிபதி பதவியில் வெற்றிடம் ஏற்பட்டு மூன்று நாட்களுக்குள் நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும்.
இதற்கமைய குறித்த சட்டத்தின் 05வது சரத்துக்கு அமைய ஜனாதிபதியின் பதவியில் ஏற்பட்டிருக்கும் வெற்றிடம் குறித்து செயலாளர் நாயகம் இன்று (16) நாடாளுமன்றத்தில் அறிவிக்கவுள்ளார்.
அதேநேரம், கட்சித் தலைவர்களால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய எதிர்வரும் 20ஆம் திகதி புதிய ஜனாதிபதி நாடாளுமன்றத்தின் ஊடாகத் தெரிவுசெய்வது இடம்பெறும் என நேற்று (15-07-2022) முற்பகல் 10.00 மணிக்கு நடைபெற்ற கட்சித் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன (Mahinda Yapa Abeywardena) தெரிவித்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் 19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வேட்புமனுக்கள் கோரப்படும் எனவும், அதன் பின்னர் 20ஆம் திகதி புதன்கிழமை நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு ஜனாதிபதி தெரிவுசெய்யப்படுவார் என்றும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயகக் கட்டமைப்பிற்குள் சட்ட விதிகளுக்கு அமைவாக எந்தவொரு தடையுமின்றி இந்த நடவடிக்கைகளைத் துரிதமாக முன்னெடுப்பதற்கு அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பையும் எதிர்பார்ப்பதாக சபாநாயகர் இங்கு தெரிவித்துள்ளார்.