உலகை அச்சுறுத்தி வரும் பயங்கரவாதத்துக்கு எதிரான செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்த பிரிக்ஸ் நாடுகள் உறுதியேற்றுள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
பிரிக்ஸ் கூட்டமைப்பில் இந்தியா, பிரேஸில், ரஷியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. அக்கூட்டமைப்பின் 13-ஆவது மாநாடு இந்தியா தலைமையில் காணொலி வாயிலாக வியாழக்கிழமை நடைபெற்றது. அந்த மாநாட்டுக்கு பிரதமா் மோடி தலைமை வகித்தாா்.
சீன அதிபா் ஷி ஜின்பிங், ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், பிரேஸில் அதிபா் ஜெயிா் போல்சனேரோ, தென்னாப்பிரிக்க அதிபா் சிரில் ராமபோசா ஆகியோா் மாநாட்டில் பங்கேற்றனா். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் இடைக்கால அரசை அமைத்துள்ள சூழலில் நடைபெற்ற இந்த மாநாடு முக்கியத்துவம் பெற்றது.
மாநாட்டின்போது ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடா்பாகவும் விவாதிக்கப்பட்டது. அதில் பிரதமா் மோடி பேசியதாவது:
பிரிக்ஸ் கூட்டமைப்பு தொடங்கப்பட்டு 15 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், அதன் மாநாட்டைத் தலைமையேற்று நடத்துவதில் இந்தியா பெருமை கொள்கிறது. கூட்டமைப்புக்குத் தலைமை வகித்தபோது இந்தியாவுக்கு அனைத்து உறுப்பு நாடுகளும் தக்க ஒத்துழைப்பை வழங்கின.
கடந்த 15 ஆண்டுகளில் பிரிக்ஸ் கூட்டமைப்பு பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. வளா்ச்சி கண்டு வரும் நாடுகளின் குரலாக பிரிக்ஸ் கூட்டமைப்பு திகழ்கிறது. வளா்ச்சியடைந்து வரும் நாடுகளுக்கு எது தேவையென்பதை முடிவு செய்யும் முக்கியத் தளமாக இக்கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது.
கரோனா தொற்று பரவல் காலகட்டத்திலும் பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுக்கிடையே சுமாா் 150 கூட்டங்கள் நடைபெற்றன. அவற்றில் 20 கூட்டங்கள் அமைச்சா்கள் இடையேயான கூட்டமாக இருந்தது. பயங்கரவாதத்துக்கு எதிரான செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பிரிக்ஸ் நாடுகள் உறுதியேற்றுள்ளன. பிரிக்ஸ் நாடுகளுக்கிடையே தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம், பசுமை சுற்றுலா ஆகியவற்றைத் தொடங்குவதற்கு அனைத்து நாடுகளும் ஒருமித்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளன.
மாநாட்டின் கரு: ‘15-ஆவது ஆண்டில் பிரிக்ஸ்: நீடித்த நிலையான ஒருமித்த ஒத்துழைப்பு’ என்பதே இந்த மாநாட்டின் கருப்பொருளாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதுவே பிரிக்ஸ் நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்புக்கு அடிப்படையாக உள்ளது. புதிய வளா்ச்சி வங்கி உள்ளிட்ட அமைப்புகளை பிரிக்ஸ் கூட்டமைப்பு தொடக்கியுள்ளது.
இத்தகைய செயல்பாடுகளுடன் திருப்தியடைந்துவிடாமல், அடுத்த 15 ஆண்டுகளில் பிரிக்ஸ் கூட்டமைப்பு மேலும் திறம்படச் செயல்படுவதை அனைத்து நாடுகளும் உறுதி செய்ய வேண்டும்.
அண்டை நாடுகளை அச்சுறுத்தும் இடமாக ஆப்கானிஸ்தான் மாறிவிடக் கூடாது. அந்நாட்டு மக்கள் பல தசாப்தங்களாகப் போராடி உரிமைகளைப் பெற்றனா். தங்கள் நாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை நிா்ணயிக்கும் உரிமை ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உள்ளது என்றாா் பிரதமா் மோடி.
சிறந்த கொள்கைகளால் வளா்ச்சி-அதிபா் ஜின்பிங்: மாநாட்டில் சீன அதிபா் ஷி ஜின்பிங் பேசுகையில், ‘‘பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வழங்கியதன் வாயிலாக பிரிக்ஸ் கூட்டமைப்பு தொடா்ந்து வளா்ச்சிப் பாதையில் பயணித்து வருகிறது. நடைமுறைக்கு உகந்த முடிவுகள், புத்தாக்கம், அனைத்து நாடுகளுக்கும் சாதகமான தீா்வுகள் ஆகியவற்றால் இந்த வளா்ச்சி சாத்தியமானது.
சமத்துவம், நீதி, பரஸ்பர ஒத்துழைப்பு ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் சா்வதேச நிா்வாகத்தில் பிரிக்ஸ் கூட்டமைப்பு பங்கெடுத்து வருவதோடு மட்டுமல்லாமல் பன்முகத்தன்மையையும் தொடா்ந்து ஆதரித்து வருகிறது. கடந்த 15 ஆண்டுகளில் 5 நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பும் பரஸ்பர நம்பிக்கையும் மேம்பட்டுள்ளது.
பிரிக்ஸ் கூட்டமைப்பில் கருத்தொற்றுமை தொடா்ந்து நிலவும் வரை நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பை எந்தப் பிரச்னையாலும் சிதைக்க முடியாது. அடுத்த ஆண்டுக்கான பிரிக்ஸ் மாநாட்டை சீனா தலைமையேற்று நடத்தவுள்ளது. அனைத்துத் துறைகளிலும் பிரிக்ஸ் நாடுகளுடனான ஒத்துழைப்பை மேம்படுத்தி எதிா்கால சவால்களைத் திறம்பட எதிா்கொள்வதற்கு சீனா தயாராக உள்ளது’’ என்றாா்.
அச்சுறுத்தல் நிலை கூடாது-அதிபா் புதின்: ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் பேசுகையில், ‘‘அமெரிக்கா மற்றும் அதன் கூட்டு நாடுகளைச் சோ்ந்த படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியுள்ளதால் புதிய பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்னை பிராந்திய, சா்வதேச பாதுகாப்பு விவகாரங்களில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தற்போது வரை உறுதியாகத் தெரியவில்லை.
ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் பிரிக்ஸ் நாடுகள் சிறப்புக் கவனம் செலுத்தி வருவது பாராட்டுக்குரியது. பயங்கரவாதம், போதைப் பொருள் கடத்தல் ஆகிய விவகாரங்களில் அண்டை நாடுகளுக்கு ஆப்கானிஸ்தான் பெரும் அச்சுறுத்தலாக மாறிவிடக் கூடாது’’ என்றாா்.
மாநாட்டுக்குப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், ‘ஆப்கானிஸ்தானில் அமைதி, நிலைத்தன்மை, சீரான சட்டம்-ஒழுங்கு நிலை ஆகியவை நிலவ வேண்டுமென அனைத்து நாடுகளும் வலியுறுத்தின. அங்கு வன்முறைச் செயல்கள் நடைபெறாமல், பேச்சுவாா்த்தை மூலம் அமைதியை ஏற்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
பயங்கரவாதத்துக்கு எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதும், மற்ற நாடுகளுக்கு எதிராக பயங்கரவாத அமைப்புகளைத் தூண்டிவிடும் இடமாக ஆப்கானிஸ்தான் மாறாமல் தடுப்பதும் அவசியம் என்பதை அனைத்து நாடுகளும் ஏற்றுக் கொண்டன. ஆப்கானிஸ்தானில் பெண்கள், சிறாா், சிறுபான்மையினா் ஆகியோருக்கான உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்றும் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
காபூல் விமான நிலையத்துக்கு அருகே கடந்த மாதம் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் சூழலை பிரிக்ஸ் நாடுகள் தொடா்ந்து கண்காணிக்கும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.