கலகெடிஹேன பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தக தம்பதியினரை அச்சுறுத்தி கடத்திச் சென்ற சொகுசு காரை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யக்கல – மஹவிட்ட பிரதேசத்தில் உள்ள வீதி ஒன்றுக்கு அருகில் இவர்கள் சூப் அருந்திக் கொண்டிருந்த போது சொகுசு வேனில் வந்த சிலர் வாகனத்தை கடத்திச் சென்றுள்ளனர்.
அங்கு சந்தேக நபர்களில் ஒருவர் பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியதுடன், கைபேசியையும் தரையில் வீசியுள்ளார்.
பின்னர் தம்பதியினர் தங்களது கார் கடத்தப்பட்டமை தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்தனர்.
விரைந்து செயற்பட்ட வீரகுல, பெம்முல்ல மற்றும் பல்லேவெல பொலிஸ் நிலையங்களின் அதிகாரிகளால் கூட்டு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
அந்த குழுக்கள், ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காரைக் கண்காணித்துள்ளனர்.
படலேய மக்கனிகொட பிரதேசத்தில் கிளை வீதியொன்றின் முனையிலுள்ள காணியில் காரை கைவிட்டு சென்ற மூவரும் சுமார் 20 நிமிடங்கள் அங்கேயே தங்கியிருந்தமையும் பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
பின்னர் சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இருப்பினும், ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குறித்த இடத்திற்கு பொலிஸார் சென்றதையடுத்து, காரை மீள எடுத்துச் செல்லும் நோக்கில் அங்கு வந்த சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பின்னர், பிரதேசவாசிகளின் உதவியுடன் காரை கடத்த வந்த கொள்ளைக் கும்பலின் பிரதான சந்தேக நபரான ரத்தல்கொட களு வசந்த உட்பட 8 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்தனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் பயணித்த சொகுசு வேனை பொலிஸார் பொறுப்பேற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.