தமக்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும் என்றும், உயிரிழந்த மீனவர்களுக்கு நீதி வேண்டியும் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் கடற் தொழிலாளர்கள் போராட்டத்தினை முன்னெடுத்துவருகின்றனர்.
இதன் அடுத்தகட்டமாக பொலிகண்டி ஆலடிப் பகுதியில் தமது படகுகளை எரித்து போராட்டத்தை கடற் தொழிலாளர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்திய இழுவைப் படகுகளை அனுமதிக்க கூடாது என்றும், உயிரிழந்த இரண்டு கடற் தொழிலாளர்களுக்கு நீதி கோரியும், அமைச்சர் இதற்கான நடவடிக்கையை எழுத்து மூலம் வழங்க வேண்டும் என்று கோரியும் போராட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையில் யாழ். செயலகம் இன்று முற்றுகையிடப்பட்டதுடன், அமைச்சர் பேச்சுவார்த்தைக்கு சென்ற போது அந்த இடத்தில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.
அதுமாத்திரமன்றி, சுப்பர்மடம் பகுதியிலும் கடற் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப் போராட்ட களத்திற்கும் சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் கடற் தொழிலாளர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.
எனினும், இதன்போது ஏற்பட்ட குழப்பத்தையடுத்து அமைச்சர் அங்கிருந்து வெளியேறிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இப்போராட்ட களத்திற்கு அமைச்சர் சென்ற போது எஸ்ரிஎப் மற்றும் இராணுவத்தினரின் பாதுகாப்புடன் சென்றதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.