பெற்றோலியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதி பெறுவதற்கான உடன்படிக்கை, இன்று மாலை கைச்சாத்திடப்படவுள்ளது.
இந்த கடன் வரி கிடைப்பதன் காரணமாக இலங்கையில் தற்போதைய மின்சார நெருக்கடியை தீர்க்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கடன் வரி தொடர்பில், இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இலங்கையின் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸுக்கு எழுதிய கடிதத்தில் உறுதியை வழங்கியிருந்தார்.
2021 டிசம்பரில் இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் இந்திய பயணத்தின் போது அடையாளம் காணப்பட்ட பொருளாதார ஒத்துழைப்பின் நான்கு விடயங்களில் பெற்றோலியப் பொருட்கள் தொடர்பான கடன் வரி முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்தியா, அந்நியச் செலாவணி பிரச்சினையை தீர்க்கும் முகமாக இலங்கைக்கு 900 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியிருந்தது.
இந்த நடவடிக்கைகள், இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் இந்தியாவின் உறுதிப்பாட்டிற்கு உந்துதலை வழங்குவதாக இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் குறிப்பிட்டுள்ளது.