நுண்கடன் காரணமாக மண்முனை தென் எருவில்பற்று பிரதேசசபைக்குட்பட்ட பகுதியில் 22 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் அனுமதியின்றி செயற்பட்ட நுண்கடன் நிதி நிறுவனங்களை மூடும் செயற்பாடுகள் பிரதேசசபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜினால் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு,மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபைக்குட்பட்ட களுவாஞ்சிகுடி, ஓந்தாச்சிமடம், கோட்டைக்கல்லாறு ஆகிய பகுதிகளில் தவிசாளரினால் நேற்றையதினம் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது பிரதேசசபையின் வியாபார பதிவுச்சான்றிதழ்பெறாத நுண்கடன் நிறுவனங்களை முடிய தவிசாளர் பிரதேசசபையின் அனுமதியைப்பெற்ற பின்னரே நிறுவனங்களை திறக்கமுடியும் என தெரிவித்தார்.
அத்துடன் நிதி நிறுவனங்களை அழைத்து சில விதிமுறைகளை வழங்கியதாகவும் அந்த விதிமுறைகளை மீறிய வகையில் செயற்படும் நிதி நிறுவனங்களையும் மூடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தவிசாளர் தெரிவித்தார்.