நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு துறையில் செயற்படுத்தக்கூடிய விசேட திட்டங்கள் தொடர்பில் வியூகங்கள் அமைக்கும் ஆய்வுகூட்டம் ஜீவன் தொண்டமானின் தலைமையில் நேற்று கலந்துரையாடப்பட்டது.
கொழும்பில் நேற்று (2023.11.23) நடைப்பெற்ற கலந்துரையாடலில் ஐக்கிய நாடுகள் சபையின் விசேட செயல் திட்டங்களுக்கான பணியகத்தின் இலங்கை பணிப்பாளர் சார்ள்ஸ் கலந்துக் கொண்டுள்ளார்.
அத்தோடு, அமைச்சின் செயலாளர் வருண சமரதிவாகர, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அதிகார சபையின் தலைவர் நிஷாந்த ரணதுங்க, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி, அமைச்சின் அதிகாரிகள், ஐக்கிய நாடுகள் சபையின் விசேட செயல் திட்டங்களுக்கான பணியகத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளும் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
அனைவருக்கும் சுத்தமான குடிநீரை வழங்குவதற்கான ஏற்பாடு மற்றும் பெருந்தோட்டத்துறையில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல் தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இதற்காக சர்வதேச நாடுகள், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் விசேட செயல் திட்டங்களுக்கான பணியகம் ஆகியவற்றிடம் இருந்து கிடைக்கப்பெறும் ஒத்துழைப்பு, உதவித் திட்டங்கள் பற்றியும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளன.
அத்துடன், பெருந்தோட்டத்துறையில் உள்ள குடிநீர் உற்பத்தியாகும் பகுதிகளை பாதுகாப்பதற்கான வேலைத்திட்டம், மக்களுக்கு தடையின்றி, சுத்தமான குடிநீரை வழங்குவதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பிலும் கருத்தாடல் இடம்பெற்றுள்ளது.