ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் நீடித்துவரும் நிலையில் , உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள ஓர் இந்திய உணவகம், போரால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய மாணவர்கள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு ரட்சகனாக மாறியுள்ளதாக கூறப்படுகின்றது.
ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வரும் இக்கட்டான சூழ்நிலையிலும் 130-க்கும் மேற்பட்டோருக்கு அந்த உணவகம் அடைக்கலம் அளித்துள்ளது. உக்ரைன் தலைநகர் கீவில், ‘சாதியா’ என்ற உணவகத்தை குஜராத்தை சேர்ந்த மனீஷ் தேவ் என்பவர் நடத்தி வருகிறார். ஒரு கட்டிடத்தின் அடித்தளத்தில் இந்த உணவகம் அமைந்துள்ளதால் இது ஒரு வகையில் பதுங்குமிடமாக மாறியுள்ளது.
ரஷ்ய படைகளின் தாக்குதல் காரணமாக கீவ் நகரின் வீதிகள் போர்க்களமாக மாறியுள்ளன. இந்த இக்கட்டான நேரத்தில் உக்ரைனில் தவிக்கும் இந்தியர் கள் மட்டுமின்றி, உள்ளூர் மக் களுக்கும் இந்த உணவகம் அடைக்கலம் அளித்துள்ளது. அந்த உணவகத்தில் மாணவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள், வீடற்றவர்கள் என 130-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். அனைவருக்கும் தங்க இடமளித்து உணவும் அளித்து வருகிறார் மனீஷ் தேவ் எனும் இந்தியர்.
கடந்த வியாழக்கிழமை ரஷ்யா தாக்குதலை தொடங்கியபோது, அங்கு அடைக்கலம் புகுந்தவர்களுக்கு மனீஷ் தேவ் பிரியாணி வழங்கியுள்ளார் . ஆனால் உணவுப் பொருள் கையிருப்பு நாளுக்கு நாள் குறைந்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மனீஷ் தேவ் கூறுகையில்,
“போர் காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் உணவுப் பொருள்களை மீண்டும் கொள்முதல் செய்ய முடியவில்லை. இன்னும் 4-5 நாட்களுக்கு மட்டுமே அரிசி மற்றும் மாவுப் பொருட்கள் உள்ளன. காய்கறி மற்றும் பிற பொருட்களும் தேவைப்படுகிறது. என்னால் எத்தனை நாட்களுக்கு முடியுமோ அத்தனை நாட்களுக்கு அடைகலம் கேட்டு வந்தவர்களுக்கு உணவு வழங்குவேன் என்றார்.
இந்தியாவின் குஜராத் மாநிலம் வடோத ராவில் இருந்து மனீஷ் தேவ் கடந்த 2021 அக்டோபரில் கீவ் சென்றார். மேலும் உக்ரைனுக்கு இந்திய கலாச்சாரத்தை கொண்டுவரவும் அங்குள்ள இந்தியர்களுக்கு தங்கள் வீட்டின் சுவைவை வழங்கவும் அவர் இந்த உணவ கத்தை திறந்ததாக கூறப்படுகின்றது.