நியூயோர்க்கில் வரலாறு காணாத கனமழை பெய்து வரும் நிலையில், முதன்முறையாக தேசிய வானிலை சேவையால் திடீர் வெள்ள அவசரநிலை வெளியிடப்பட்டுள்ளது.இன்று (வியாழக்கிழமை) இரவுமுதல் அவசரநிலை அமுல்படுத்தவுள்ளதாக மேயர் பில் டி பிளாசியோ அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘நியூயோர்க்கில் நேற்று இரவுமுதல் வரலாறு காணாத அளவில் வானிலை மோசமாக உள்ளது. மாகாணம் முழுவதும் பெய்த கனமழையால் வீதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து ஆபத்தான நிலை உருவாகியுள்ளது. இதனால், இன்று இரவுமுதல் அவசரநிலை அமுல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுவரை 5,300 வாடிக்கையாளர்கள் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக புகார் அளித்துள்ளனர்.
அடுத்த சில மணிநேரத்தில் மழை நிற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து மாகாணம் முழுவதும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஆகவே, சுரங்கப்பாதைகள் மற்றும் வீதியோரங்களில் யாரும் நிற்க வேண்டாம். அனைவரும் வீடுகளிலேயே இருக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.
ஐடா சூறாவளியை தொடர்ந்து நியூயோர்க் நகரம் மற்றும் ட்ரை-ஸ்டேட் பகுதி முழுவதும் வரலாற்று வெள்ளத்தை கண்டுள்ளன. நியூ ஜெர்சியில் குறைந்தது ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறுகிய காலத்தில் பெய்த கனமழை, சுரங்கப்பாதைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் திடீர் வெள்ளத்திற்கு வழிவகுத்தது.