இன்றுமுதல் 50 கிலோ கிராம் எம்ஓபி உர மூட்டை ஒன்றின் விலை 1,000 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார்.
பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில் நேற்று (14) காலை நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,
தற்போது கமநல சேவை நிலையங்கள் மூலம் 15,000 ரூபாய்க்கு விற்கப்படும் எம்ஓபி உர மூட்டையின் விலையானது இன்று(15) முதல் 14,000 ரூபாயாக குறைக்கப்படவுள்ளது.
எனவே நாளை முதல் புதிய விலையில் கமநல சேவை நிலையங்களில் இருந்து எம்ஓபி உரத்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு விவசாயிகளுக்கு கிடைக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை இந்த ஆண்டு தொடக்கத்தில் ரூ.22,000க்கு மேல் இருந்த எம்ஓபி உரத்தின் விலை ரூ.19,500ஆக குறைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து உரத்தின் விலையை மேலும் 4,500 ரூபாவால் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.