ஆர்ப்பாட்டக்காரர்கள் புதன்கிழமை(நாளையதினம்) நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பை தடுப்பதற்கோ, அல்லது பொதுக் கட்டிடங்களை ஆக்கிரமிப்பதற்கோ அனுமதிக்கப் போவதில்லை என பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் சட்டம் ஒழுங்கு ஒன்று காணப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிஎன்என் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,
மக்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட முடியும். நாடாளுமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்றமும் தமது கடமைகளைச் செய்ய ஆர்ப்பாட்டக்காரர்கள் இடமளிக்க வேண்டும். தடுக்க முயற்சிக்க கூடாது.
20ஆம் திகதி(நாளைய தினம்) ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பிற்கு முன்னர் நாடளாவிய ரீதியில் அமைதியின்மை ஏற்படுவதை தடுப்பதற்காகவே அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
பொலிஸாரும், இராணுவத்தினரும் ஆயுதங்களை பயன்படுத்துவதை தவிர்க்க நினைக்கின்றோம். அவர்கள் மீதும் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ஆனால் முடிந்தளவிற்கு ஆயுதங்களை பயன்படுத்த வேண்டாம் என அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.
மக்கள் அனுபவிக்கின்ற துயரங்களை என்னால் புரிந்துகொள்ள முடியும். மூன்று மோசமான வாரங்கள் காணப்படும் என நான் இதற்கு முன்னர் நான் அறிவித்திருந்தேன் என குறிப்பிட்டுள்ளார்.