நாட்டையும் மக்களையும் ஏமாற்றும் அத்தியாயமொன்று இன்று மீண்டும் ஆரம்பமாகியுள்ளதாகவும், நாளுக்கு நாள் கூடி, விவாதங்களை நடத்தி, நாட்டை அலைக்கழித்து, கலைந்து செல்வதை தவிர நாட்டைக் கட்டியெழுப்பும் எந்தவொரு வேலைத்திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்திற்கு வழங்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் யாது என வெளியிட வேண்டும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், நாடு வீழ்ந்துள்ள வங்குரோத்து நிலையிலிருந்து மீட்கும் எந்தவொரு திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை எனவும் தெரிவித்தார்.
போசாக்கின்மையால், பட்டினியால் சிறுவர்கள் வாடி பாடசாலைகளில் மயங்கி விழுவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அவற்றை அம்பலப்படுத்தும் அதிகாரிகளுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
தற்போதைய ஜனாதிபதி நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்களை கைவசம் வைத்துக் கொண்டு ஜனாதிபதி பதவியை பெற்றுக்கொண்டதாக கூறிய கூற்றொன்றை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சித் தலைவர், அந்தப் பணம் தற்போது எங்கே உள்ளது என்றும் கேள்வி எழுப்பினார்.
சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகள் கூட இன்று மாறினாலும்,அரசாங்கத்தின் கொள்கைகள் மாறாதுள்ளமை வருத்தத்தையும் துயரத்தையும் அளிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இத்தனைக்கும் மத்தியில் பல்வேறு அரசியல் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க அரசாங்கம் முயற்சித்து வருவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இந்த முட்டாள்தனமான அரசில் இணைவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து எவரும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
அரசியல் பொறாமையும் கபடமும் நிறைந்த அரசாங்கத்தால் இந்நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், பொருளாதாரத்தைச் சுருக்கி நாட்டைக் கட்டியெழுப்புவோம் என்ற மாயையை முன்வைத்து அரசாங்கத்தின் அமைச்சுப் பதவிகள் அதிகரிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.