பெரும் போக நெற்செய்கைக்காக 13,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் நாட்டை வந்தடைந்துள்ளது. இந்த 13,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்டு கொழும்பு துறைமுகத்தில் இறக்கப்பட்டுள்ளது.
பெரும் போகத்திற்கு கொள்வனவு
பெரும் போகத்திற்கு தேவையான யூரியாவை கொள்வனவு செய்ய உலக வங்கி 105 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கியுள்ளது.
மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள கமநல சேவை நிலையங்களுக்கு முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் நெற்செய்கைக்கான முழுத் தேவையையும் ஒரே தடவையில் பெற்றுக்கொள்ளும் வகையில் முதலாவது யூரியாவை விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பெரும் போக நெற்செய்கை இன்னும் ஆரம்பிக்கப்படாவிட்டாலும் விதை நெல் விதைத்த 14 நாட்களுக்குள் அனைத்து விவசாய சேவை நிலையங்களுக்கும் முதல் உரம் இடுவதற்கு போதுமான இருப்புக்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது கப்பல் நவம்பர் கடைசி வாரத்தில்
அதேவேளை இரண்டாவது விலைமனுக்கோரலுக்கு அமைய 120,000 மெட்ரிக் தொன் உரத்தை ஏற்றிய இரண்டாவது கப்பல் நவம்பர் கடைசி வாரத்தில் நாட்டை வந்தடையவுள்ளது.
மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கு அமைச்சினால் 7500 மெட்ரிக் தொன் உரம் வழங்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
அத்துடன் ஏனைய மாவட்டங்களுக்கு முதல் தொகுதிக்கு தேவையான யூரியாவை ஏற்கனவே விநியோகித்துள்ளதாக தெரிவித்த அமைச்சர், அடுத்த மாதம் கடைசி வாரத்திற்குள் இரண்டு வகையான உரங்களையும் முழுமையாக வழங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.
உலக சந்தையில் யூரியாவின் விலை அதிகரித்தாலும், ஒரு மூடை ரூபா 10,000 வழங்கவுள்ளதாகவும், எனவே, இந்த பெரும் போகத்தில் விவசாயிகள் எவ்வித தயக்கமும் இன்றி விவசாயம் செய்ய வேண்டும் எனவும் அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.