எரிவாயு சிலிண்டர்களில் கசிவு எங்கிருந்து ஏற்பட்டது என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
கசிவு ,எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்டதா? அல்லது குழாயில் எற்பட்டதா? அல்லது மேல் மூடியில் ஏற்பட்டதா? என்று விசாரணை செய்வதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (30) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தற்பொழுது தொடர்ச்சியாக எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன இதற்கு என்ன காரணம்? என்று ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சரவை இணைப் பேச்சாளர் இவ்வாறு தெரிவித்தார்.
2015 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 230 எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக நேற்றைய தினம் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது குறிப்பிட்டார்.
இருப்பினும் தற்பொழுது நடைபெறும் எரிவாயு வெடிப்பு சம்பவத்திலே புரொப்பேன் ( Propane) பூட்டேன் ( Butane) இரண்டு மூலகங்களும் 50 க்கு 50 என்ற விகிதத்தில் சேர்க்கப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அரசாங்க பகுப்பாய்வு திணைக்களம், நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை மற்றும் மொறட்டுவ பல்கலைக்கழக இரசாயன பகுப்பாய்வு மையம் இதற்கு உதவி செய்கின்றது.
இலங்கை தேசிய தரக்கட்டுப்பாட்டு நிலையம் இந்த மாதிரிகளை எடுத்து பரிசோதித்து வருகின்றது. இது தொடர்பான அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெகு விரைவில் ஆராயப்படும் என்றும் ரமேஷ் பத்திரண மேலும் குறிப்பிட்டார்