நாடாளுமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இரு வீதித்தடைகளை தகர்த்துக் கொண்டு நாடாளுமன்றத்தை நோக்கி நகர்ந்துள்ளனர்.
இன்னும் இரு வீதித்தடைகளே நாடாளுமன்றத்தை அடைய இருக்கின்ற போதிலும், அந்த வீதித்தடைகளுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தை அண்மித்த பொல்வதுவ சந்தியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலை நிலவி வருகிறது.
இந்த நிலையில் அப்பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று காலை முதல் பிரதமர் செயலகத்திற்கு முன்பாக போராட்டம் நடத்தப்பட்டு வந்த நிலையில் பிற்பகல் அளவில் போராட்டக்காரர்கள் பிரதமரின் செயலகத்தை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தனர்.
இந்த சந்தர்ப்பத்தில் அப்பகுதியில் தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் என்பன மேற்கொள்ளப்பட்டிருந்தன.
மேலும், நாடாளுமன்றத்தை கைப்பற்ற முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், நாடாளுமன்றத்திற்கு வெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.