இலங்கையில் இயக்கர், நாகர் என்கிற இரு இனக்குழுமங்கள் வாழ்ந்துள்ளன. இந்த இரு இனக்குழுமங்களே இத்தீவின் காலத்தால் முந்திய தொன்மக் குடிகள்.
இந்த தொன்மக் குடிகளின் பண்பாட்டுப் பரவலுக்கான தொல்லியல் சான்றுகள் அண்மைக்காலமாக வடக்கு, கிழக்கு பாகங்களில் அதிகளவு கிடைக்கின்றன.
இதுவரை பலாங்கொடை மனித எச்சங்களே ஆகத்தொன்மையானவையாக இருந்தன. கடந்த ஆண்டு வேலணையில் இடம்பெற்ற தொல்லியல் ஆய்வுகள் அதனைப் பின்தள்ளிவிட்டது.
பெருங்கற்கால முதிர்ச்சியில் உருவான சமூக, பொருளாதார பண்பாட்டு வளர்ச்சியை சான்றுப்படுத்தும் பல நூறு தொல்லியல் எச்சங்கள் வடக்கு கிழக்கு முழுவதிலும் கிடைத்திருக்கின்றன. கிடைத்துவருகின்றன.
தமிழ் வரிவடிவத்தின் தொடக்கமான தமிழி வரிவடிவத்தின் ஆரம்பக் குறியீடுகள்/எழுத்துகள் யாழ்ப்பாணத்தின் ஆனைக்கோட்டையிலேயே கிடைத்துள்ளன.
இதன் வாசிப்பைச் செய்த ஈழ, தமிழக கல்வெட்டாசிரியர்கள் தமிழ் வரிவடிவத்தின் தொடக்கப்புள்ளி இதுவென ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இதனால் தென்னாசியாவின் பண்பாட்டு வளர்ச்சியும், வேரும் தமிழை அடிப்படையாகக்கொண்டு, ஈழத்திலிருந்தே மேல்நோக்கி படர்ந்திருக்க வேண்டும் என்கிற சிந்தனை பரவலாக முன்வைக்கப்படுகிறது.
உதாரணத்திற்கு திருக்குறளில் இடம்பெறும் பல சொற்கள் வட்டுக்கோட்டை பிராந்தியத்தில் பயில்வழக்கில் உள்ளதாக உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு ஆய்வு இதழொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெருங்கற்கால சுடுமண் சிற்பங்கள், அதற்குப் பின்னரான வரலாற்றுத் தொடக்ககால சிற்பங்கள், பிற்பட்டகால கற்சிற்பங்கள் அனைத்திலும் நாகம் வடிவமைக்கப்பட்டுள்ளமை இந்த வழிபாட்டு மரபிற்கு நீண்டதும் தொடர்ச்சியானதுமான பயணம் இருப்பது உறுதியாகின்றதல்லவா. இந்த வழிபாட்டைக் கைவிடாது தொடரும் இனக்குழுமம் ஒன்று தொடர்ச்சியாக இயங்கியிருக்கின்றமை புலனாகின்றதல்லவா.
எனவே இந்தத் தொன்மைமிகு மக்கள் கூட்டத்தின் ஒரு தொகுதியினராக நாகர்கள் இருந்துள்ளனர்.
மனிதப் பரிணாமத்தில் இயற்கை அழிவுகளுக்கு அஞ்சி அவற்றை இறைவனாக வழிபடத் தொடங்கிய காலத்தில் நாக பாம்புகளை வழிபடும் மரபும் தோன்றியது. அவ்வாறு நாக பாம்புகளை வழிபடும் மரபினர் நாகர்களாயினர்.
நாகம் தம் குலத்தைக் காக்கும் என்ற நம்பிக்கையோடு அதனை வழிபடத் தொடங்கினர். அந்த வழிபாட்டின் தொடர்ச்சிதான் இன்றைய நாகதம்பிரான் ஆலயங்கள்.
தமிழர் வாழும் எல்லா பீரதேசங்களிலும் நாக வழிபாட்டிடங்கள் சிறியளவிலும், பெரியளவிலும் உள்ளன. நாகர்கோவில், புதூர், புளியம்பொக்கணை, கோம்பவில் போன்ற இடங்களில் பெரியளவு நாகதம்பிரான் ஆலயங்கள் உள்ளன.
இத்தீவில் செழுமைமிகு பண்பாட்டின் தொடக்க்கர்த்தாக்கள் நாகர்கள் என்பதற்கும், அந்த நாகர்களின் வழிவந்தவர்களே ஈழத் தமிழர்கள் என்பதற்கும் இதுவே வலுவான சான்றல்லவா..!
இத்தீவில் ஈழத் தமிழரின் வரலாறு கேள்விக்குள்ளாக்கப்படும் இத்தருணத்தில் இந்த வரலாற்றுச் செய்தியையும் படங்களோடு சேர்த்துக் கொண்டு செல்வோமென வவுனியாவை சேர்ந்த ஜெரா தம்பி என்பவர் இந்த தகவலை முகநூலில் பதிவிட்டுள்ளார்.