யாழ்ப்பாணம் ( Jaffna) – நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத் திருவிழா தொடர்பில் முன்னாயத்த கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது, கடந்த 21ஆம் திகதி யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத் திருவிழாவினை எதிர்வரும் ஜீன் 07ஆம் திகதி தொடக்கம் ஜீன் 22ஆம் திகதி வரை நடத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும், திருவிழாக் காலங்களில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து குறிகட்டுவான் வரையிலான இலங்கை போக்குவரத்து சேவை மற்றும் தனியார் பேருந்து சேவைகளுக்கான ஒருவழிக் கட்டணம் 187ரூபா என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறிகட்டுவானில் இருந்து ஆலயம் செல்வதற்கான படகு போக்குவரத்து ஒரு வழிக் கட்டணம் 80 ரூபா எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, கடற்போக்குவரத்திற்கான நேரத்திற்கமைய தனியார் போக்குவரத்து மற்றும் இலங்கை போக்குவரத்து பேருந்து சேவை காலை 6 மணி தொடக்கம் மாலை 7.30 மணிவரையிலும் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்நிலையில், கடற்போக்குவரத்தில் ஈடுபடும் படகு உரிமையாளர்கள், படகுகளை உரிய முறையில் பேணுவதுடன் படகில் ஏற்றிச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துதல் மற்றும் பயணிகளுக்குரிய வசதிகள் இல்லாத படகுகளை சேவையில் ஈடுபடுத்துவதை தவிர்த்தல் வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள கள்ளு விற்பனை நிலையம் திருவிழாக்காலத்தில் பூட்டப்படுமெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருவிழாவின் போது திருடர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸ் உத்தியோகத்தர்களை பாதுகாப்பில் ஈடுபடுத்தலுடன் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகளின் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக பிரதேச சபையினால் அடையாள அட்டைகள் வழங்கப்படுதல் வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுமாத்திரமன்றி, குறிக்கட்டுவான் வீதி குன்றும் குழியுமாக உள்ளமையினால் அதனை சீர்செய்வது தொடர்பாகவும், சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் சேவை, பொலிஸ் பாதுகாப்பு மற்றும் கடற்போக்குவரத்தில் பாதுகாப்பு அங்கிகளை அணிவதை உறுதிப்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளன.
மேலும், இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், உதவி மாவட்டச் செயலாளர் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.