மன்னார் விடத்தல் தீவு கடற்பரப்பில் மீனவர் ஒருவரின் அட்டை பண்ணையில் இருந்து கடல் அட்டையை திருடியதாக கூறி நபர் ஒருவரை கொடூரமாக தாக்கும் காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் கடந்த திங்களன்று (23) இடம் பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.
தாக்குதலுக்கு உள்ளானவர் இலுப்பைக் கடவை பகுதியைச் சேர்ந்தவர் என தெரிய வருகின்றது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
விடத்தல் தீவு கடற்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள அட்டை பண்ணையில் குறித்த நபர் களவாக அட்டையை பிடித்ததாக கூறி இருவர் அவரை கடுமையாக தாக்கியதுடன் மன்னிப்பு கேட்க வைத்து காணொளி பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அதேவேளை தாக்குதலுக்கு உள்ளான மீனவரின் நிலை என்ன என்று இது வரை தெரியவில்லை.
மேலும் சம்பவம் தொடர்பாக இலுப்பைக்கடவை பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ள போதும் பொலிஸார் அது தொடர்பில் நடவடிக்கைகளையும் மேற் கொள்ளவில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அதேவேளை இவ்வாறு மிருகத்தனமாக நபரை தாக்கியது மட்டுமல்லாது, அதனை காணொளி எடுத்த நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.