போதைப்பொருள் விவகாரத்தில் சந்தேக நபராக கைது செய்யப்பட்டுள்ள பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர் சம்பத் மனம்பேரி நடராஜா ரவிராஜ் படுகொலை விவகாரத்தில் சந்தேக நபரல்ல என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
எமது கட்சி சார்பில் பல்லாயிரக்கணக்கானோர் தேர்தலில் முன்னிலையானார்கள். இவற்றில் குற்றவாளிகளும், சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களும் இருக்க முடியும். அனைவரின் பின்னணியும் எமக்குத் தெரியாது எனவும் குறிப்பிட்டார்.
தனியார் தொலைக்காட்சியுடன் நடைபெற்ற நேர்காணலின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சம்பத் மனம்பேரி நடராஜா ரவிராஜ் படுகொலை விவகாரத்தில் சந்தேக நபரல்ல, அவர் சாட்சியாளர்.அவருக்கு எதிராக இந்த விடயத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை. இதனை நான் ஆராய்ந்து பார்த்தேன்.
கட்சியின் வேட்புமனு வழங்கும் போது சகல உறுப்பினர்களும் சத்திய கடதாசி வழங்கினார்கள்.அதில் இவர் இந்த விடயம் பற்றி ஏதும் குறிப்பிட்டிருக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் மக்கள் விடுதலை முன்னணியின் சட்ட பிரிவில் உறுப்பினராக பதவி வகித்ததாக அக்கட்சியின் முன்னாள் உறுப்பினர் நந்தன குணதிலக குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஆணைக்குழுவின் சுயாதீனத்தை கருத்திற்கொண்டு பணிப்பாளர் நாயகம் உடன் பதவி விலக வேண்டும் எனவும் சாகர காரியவசம் தெரிவித்தார்.